×

என்எம்எம்எஸ் தேர்வில் 9,512 பேர் பங்கேற்பு

சேலம், பிப்.4: நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில், கல்வி உதவித்தொகை வழங்க தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ₹1,000 என 4 வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி தமிழகத்தில் நடப்பாண்டிற்கான தேர்வு நேற்று நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9,736 மாணவ, மாணவிகள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதில், 9,512 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். விண்ணப்பித்திருந்த 224 பேர் தேர்வெழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் முதன்மைத் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், காலை 11.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, படிப்பறிவுத் தேர்வும் நடந்தது. மாநகரில் உள்ள தேர்வு கூடங்களில், சிஇஓ கபீர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

The post என்எம்எம்எஸ் தேர்வில் 9,512 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : NMMS ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...