×
Saravana Stores

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தாங்கல் பூங்கா: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தாங்கல் பூங்காவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். இதில் எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகரமன்ற தலைவரும், திமுக நகரச் செயலாளருமான எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணியின் தீவிர முயற்சியால் நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் பகுதியில் நந்தீஸ்வரர் திருக்கோயில் எதிரே 5.23 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட பழமையான தாங்கல் ஏரியை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதில் 800 மீட்டர் தூரம் நடைபாதையும், இருபுறமும் தடுப்பு முள் வேலிகளும் அமைக்கப்பட்டு 119 மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சி செய்யவும், இயற்கை சூழலுடன் அமைக்கப்பட்டுள்ள தாங்கல் பூங்காவை பொதுமக்கள் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த தாங்கல் பூங்காவின் திறப்பு விழா நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. இதில் நகரமன்றத் தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 13வது வார்டு கவுன்சிலர் திவ்யா சந்தோஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு குறு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் எழில்மிகு தாங்கல் பூங்காவை சுற்றி பார்த்தனர். இதனையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு கழிவு நீராக காட்சி அளித்த தாங்கல் ஏரி நகரமன்ற தலைவரின் தீவிர முயற்சியால் மெருகேறி இன்று ஜொலிக்கிறது.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியாக இருந்ததை நகராட்சியாக தரம் உயர்த்தியது. திமுக ஆட்சியில்தான். மேலும் வண்டலூரில் கட்டப்பட வேண்டிய தாசில்தார் அலுவலகம் நகர மன்ற தலைவரின் தீவிர முயற்சியால் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்படும். மேலும் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் அறிவு சார் மையமும், ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடையும், ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் நகராட்சி அலுவலகமும், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாமல் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் எல்இடி விலக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் குடிநீர், வடிகால், சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் 80% சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி தன்னிறைவு பெற்ற நகராட்சியாக திகழ்கிறது. ஏற்கனவே 4 முறை பேரூராட்சி மன்ற தலைவராக இருந்து மறைந்த எம்.கே.தண்டபாணியைப்போல் அவரது மகன் கார்த்திக்தண்டபாணி திறமையாகவும், சுறுசுறுப்பாகவும் பணியாற்றி வருகிறார்.

இதில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் என்னென்ன திட்டங்களை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினோமோ அவை அனைத்தையும் 90% நிறைவேற்றி உள்ளோம் என்றார். இதில் நகரமன்ற பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ், வார்டு கவுன்சிலர்கள் ஸ்ரீமதிராஜி, சதீஷ்குமார், சசிகலா செந்தில் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியாக இருந்ததை நகராட்சியாக தரம் உயர்த்தியது திமுக ஆட்சியில்தான். ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் அறிவு சார் மையமும், ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடையும், ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் நகராட்சி அலுவலகமும், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தாங்கல் பூங்கா: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Nandiwaram ,Matravancheri Municipality ,Minister ,Mo. Anbarasan ,MB ,MLA ,Mudravancheri ,Uttaravancheri Municipality ,M. B ,M. L. A. Insiders ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED நந்திவரம் அரசு பெண்கள் பள்ளி...