×

மாமல்லபுரத்தில் இலவச பயணத்தை காரணம் காட்டி அரசு பேருந்தில் பெண்களை ஏற்ற மறுக்கும் டிரைவர், கண்டக்டர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்கள், மாணவிகள், வயதான முதியோர்களை பேருந்தில் ஏற்ற மறுக்கும் அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், இலவச பயண பேருந்துகளை பெண்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில், அந்த வகை பேருந்துகளின் வண்ணம் மாற்றப்பட்டது.

இந்நிலையில், மாமல்லபுரம் உலக புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருவதால், இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க ஆண்களை விட பெண்களே அதிகளவில் வருகை தருகின்றனர். மாமல்லபுரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மாமல்லபுரம் வருகின்றனர். பின்னர், இங்கிருந்து பேருந்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் கம்பெனிகளுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். அதில், பெரும்பாலான பெண்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக இருப்பதால் அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

மேலும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளையும், இலவச பேருந்து பாஸ் மூலமாக பயணிக்கும் பள்ளி மாணவிகளையும், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் வயதான முதியோரை பேருந்துகளில் ஏற்ற அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும், இலவச பயணம் என்கிற ஒரே காரணத்தை காட்டி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, அம்பாள் நகர், பெருமாளேரி, வடகடம்பாடி, காரணை, நல்லான் பிள்ளை பெற்றாள், நந்திமாநகர், குழிப்பாந்தண்டலம் மற்றும் எச்சூர் ஆகிய பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி சென்று பேருந்துகளை நிறுத்துவது, பெண் பயணிகள் ஏறும்போதே பேருந்தை இயக்குவது, இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவதும் இல்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக, செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் வரும் தடம் எண் 508 என்ற அரசு பேருந்து திருக்கழுக்குன்றத்தை கடந்து வரும்போது பேருந்து நிறுத்தங்களில் பெண்கள், முதியோர் நின்றிருந்தால் கண்டக்டரும் பேருந்தை நிறுத்த சொல்வதும் இல்லை. டிரைவரும் பேருந்தை நிறுத்துவதும் இல்லை.அதேபோல், காரணை உள்ளிட்ட பகுதிகளை கடந்து மாமல்லபுரம் வரை எந்த நிறுத்தத்திலும் நிற்கவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டும், டிரைவர் மற்றும் கண்டக்டரை கண்டிக்காமல் கண்டும் காணாதது போல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post மாமல்லபுரத்தில் இலவச பயணத்தை காரணம் காட்டி அரசு பேருந்தில் பெண்களை ஏற்ற மறுக்கும் டிரைவர், கண்டக்டர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,DMK ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...