×

அமித்ஷாவை சந்தித்தபின் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா: சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு காரணம்?

சண்டிகர்: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு காரணமாக அவர் பதவி விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அசாம் கவர்னராக 2016ல் நியமிக்கப்பட்டவர் பன்வாரிலால் புரோகித். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை தமிழ்நாடு கவர்னராகவும் இருந்தார். அப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். பஞ்சாபில் பகவந்த்மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி பஞ்சாப், அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் மேயர், துணைமேயர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் மேயர் தேர்தலில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணிக்கான இந்த முதல் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகள் பெற்றாலும், அதில் 8 செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவிக்கவே 12 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார்.

8 வாக்குச்சீட்டுகளில் சில குறியீடுகள் உள்ளதால் அவை செல்லாது என தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் கூறியிருந்தார். ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரியே 8 வாக்குச் சீட்டுகளில் ஏதோ எழுதுவது போன்ற விடியோ வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜ வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடை விதிக்க கோரி ஆம் ஆத்மி, காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக சண்டிகர் மாநகராட்சி மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த சூழலில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து நேற்று பஞ்சாப் ஆளுநர் பதவியை பன்வாரிலால் புரோகித் நேற்று ராஜினாமா செய்தார். இதுகுறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு புரோகித் அனுப்பியுள்ள கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த கடமைகளை நிறைவேற்றவும் பஞ்சாப் ஆளுநர் பதவியையும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாக பதவியையும் ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை ஏற்று கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

The post அமித்ஷாவை சந்தித்தபின் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா: சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு காரணம்? appeared first on Dinakaran.

Tags : Prokit ,Amitshah ,Punjab ,Governor ,Panwarilal ,Chandigarh ,PANWARILAL PROKIT ,Assam ,Punjab Governor ,Dinakaran ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...