×

நிலத்தகராறு தொடர்பாக மோதல் தானே காவல் நிலையத்தில் பாஜ எம்எல்ஏ துப்பாக்கி சூடு: ஷிண்டே அணி நிர்வாகி கவலைக்கிடம்

தானே: நிலத்தகராறில் நடந்த மோதலில், தானே காவல் நிலையத்தில் வைத்து ஷிண்டே அணி நிர்வாகியை கல்யாண் தொகுதி பாஜ எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவை அடுத்த கல்யாண் தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் பாஜ கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கண்பத் கெய்க்வாட். இவருக்கும், ஷிண்டே சிவசேனா கட்சி உல்லாஸ்நகர் நிர்வாகியான மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத்தகாராறு இருந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி ஹில்லைன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதையடுத்து இருவரும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் விசாரணைக்காக நேற்று முன்தினம் இரவில் ஹில்லைன் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென கைகலப்பாக மாறியது. அப்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பாஜ எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட், சிவசேனா நிர்வாகி மகேஷ் கெய்க்வாட்டை நோக்கி பலமுறை சுட்டார். இதில், மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவம் காவல் நிலையத்திற்குள் நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் மற்றும் அவரது கூட்டளிகள் 3 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு துணை முதல்வர் பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் ஆளும் ஷிண்டே அணி சிவசேனா மற்றும் பாஜ நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post நிலத்தகராறு தொடர்பாக மோதல் தானே காவல் நிலையத்தில் பாஜ எம்எல்ஏ துப்பாக்கி சூடு: ஷிண்டே அணி நிர்வாகி கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Thane police station ,Shinde ,Thane ,Kalyan ,Constituency ,BJP ,MLA ,Kanpat Gaekwad ,Kalyan Constituency ,Maharashtra ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...