×

நாற்று நடவுமில்ல, தண்ணீர் பாய்ச்சவுமில்ல ஆனா 2 ஏக்கரில் 16 மூட்டை நெல் மகசூல்: தஞ்சாவூர் அருகே ருசிகரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நாற்று நடவு செய்யாமலும் தண்ணீர் பாய்ச்சாமலும் இருந்த வயலில் ஏக்கருக்கு 8 மூட்டை நெல் விளைந்த சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (52). இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் குறுவை நெல் பயிரிட்டு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார். ஆனால் அப்போது நெல் அறுவடை செய்தபோது போதுமான மகசூல் கிடைக்கவில்லை. இதனால் அடுத்து சாகுபடி செய்யாமல் நிலத்தை தரிசாக விட்டுவிட்டார். இதையடுத்து அவர் வயல்பக்கம் போகவே இல்லை. இந்நிலையில் அப்பகுதியினர் 2 நாட்களுக்கு முன் ஜெயராஜை தொடர்பு கொண்டு வயலில் பயிர் முற்றி சாய்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது என்று கூறினர். இதைக்கேட்ட ஜெயராஜ் அதிர்ச்சியடைந்தார். யாராவது தன்னைக் கேட்காமல் நடவு செய்தார்களா என்ற சந்தேகத்தில் வயலுக்கு சென்று பார்த்தபோது நெற்பயிர் விளைந்திருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து ஆட்களை வைத்து அறுவடை செய்தார். இதில் 2 ஏக்கரில் மொத்தம் 16 மூட்டை நெல் கிடைத்தது. இதுகுறித்து ஜெயராஜ் கூறுகையில், ‘கடந்த முறை நெல் சாகுபடி செய்தபோது போதிய மகசூல் இல்லாமல் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அடுத்து சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டேன். இந்நிலையில்தான் வயலில் நெற்பயிர் விளைந்திருப்பது தெரிய வந்தது. கடந்த முறை கதிர் அறுத்து விட்டு அடியில் உள்ள அறுப்பு தாளிலிருந்து பயிர் வளர்ந்து அதில் நெல் விளைந்திருக்கிறது. இது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு வளர்வது சாதாரணம் என்றாலும் அறுவடை செய்யும் அளவிற்கு பயிர் வளராது. ஆனால் இந்த ரகம் உயரமாக வளர்ந்து நெல்மணிகள் விளைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஏக்கருக்கு எட்டு மூட்டை விளைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,’ என்றார்.

 

The post நாற்று நடவுமில்ல, தண்ணீர் பாய்ச்சவுமில்ல ஆனா 2 ஏக்கரில் 16 மூட்டை நெல் மகசூல்: தஞ்சாவூர் அருகே ருசிகரம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Jayaraj ,Ambalapattu South ,Pattukottai ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...