×

முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள 12 கிராம மக்களை இடமாற்றம் செய்வதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

சென்னை: முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள 12 கிராமங்களில் வசித்து வந்த 85 சதவீத குடும்பத்தினர் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் கிராம மக்களை வேறு இடத்துக்கு இட மாற்றம் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கியுள்ளது. முதுமலை புலிகள் சரணாலயத்தில், புலிகள் திட்டத்தை அமல்படுத்துவதற்காக முதுகுழி, நெல்லிக்கரை, நாகம்பள்ளி உள்ளிட்ட 12 கிராம மக்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யக் கூடாது எனவும், புலிகள் திட்டத்தை இந்த கிராமங்களில் உள்ள பட்டா நிலங்களில் அமல்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி முதுகுழி மறுவாழ்வு சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய விசாரணைக்கு வந்தது.

அப்போது, 12 கிராம மக்களை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ‘321 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள 12 கிராமங்களில் வசித்து வந்த 786 குடும்பங்களில் 681 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 105 குடும்பங்களில், 32 குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற குடும்பத்தினரை வேறு இடங்களுக்கு இடமாற்றும் பணிகள் பரிசீலனையில் உள்ளது,’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 12 கிராமங்களில் வசித்து வந்த 80 முதல் 85 சதவீத குடும்பத்தினர் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இந்தநிலையில், மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை. தனிப்பட்ட நபர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அவர்கள் வழக்கு தொடரலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்

 

The post முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள 12 கிராம மக்களை இடமாற்றம் செய்வதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Sanctuary ,Madras High Court ,Chennai ,Mudumalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...