×

சாக்லேட் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; கூலி தொழிலாளிக்கு பிப்.16 வரை நீதிமன்ற காவல்: போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாக்லெட் கொடுத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட கூலி தொழிலாளி யோவான் என்பவரை பிப்ரவரி 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் சாந்தி (8, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 2 நாட்களுக்கு முன், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:

எனது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிய போது, திடீரென அவளை காணவில்லை. பல இடங்களில் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் எனது மகள் வீட்டுக்கு வந்தாள். அவளிடம், ‘எங்கே சென்றாய்’ என கேட்டேன். அதற்கு அவள், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், என்னை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். அவரிடம் இருந்து நைசாக தப்பித்து வந்து விட்டேன்’ என கூறினாள். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். இந்த சம்பவத்துக்கு, ஒரு சிறுவனும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. சாக்லெட் வாங்கி கொடுத்து இந்த கொடூர சம்பவத்தில் அந்த வாலிபர் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்தது. என் மகள் உள்பட பல சிறுமிகள் இதேபோல், பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நபரை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். அப்போதுதான், பல சிறுமிகள் அந்த வாலிபரால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகளின் பெற்றோர்களும் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடந்தையாக இருந்த சிறுவன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். இதில், பள்ளி மற்றும் வீட்டின் வெளியே விளையாடும் சிறுமிகளை குறிவைத்து, அதே பகுதியில் உள்ள சிறுவனை பயன்படுத்தி, நைசாக பேசி அந்த வாலிபர், வெளியே அழைத்து வரவைத்து, சாக்லெட் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. தையடுத்து, அடையாறு துணை கமிஷனர் பொன்கார்த்திக் குமார், தரமணி உதவி கமிஷனர் அமீர் அஹமது ஆகியோர் 5 தனிப்படை அமைத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிறுவன் கொடுத்த அடையாளங்களை வைத்து விசாரித்தனர். அதில், திருவான்மியூர் மல்லிப்பூ நகரில் தங்கி, கூலி வேலை செய்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த யோவான் (30) என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவரை் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருவான்மியூரில் உள்ள பள்ளியில் படித்து வரும் 8 முதல் 12 வயது வரை உள்ள மாணவிகளை கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வளாகத்திற்கு வெளியே மறைவான இடத்திற்கு அழைத்து சென்று இதுபோன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.பின்னர், கைது செய்யப்பட்ட யோவானை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு நேற்று காலை போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, யோவானை பிப்ரவரி 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, யோவான் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சாக்லேட் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; கூலி தொழிலாளிக்கு பிப்.16 வரை நீதிமன்ற காவல்: போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Special POCSO ,Chennai ,POCSO Special Court ,Yowan ,Puzhal ,Thiruvanmiyur ,POCSO ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...