×

கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளை இழுக்க அதிமுக, பாஜ போட்டா போட்டி: மாறி, மாறி ரகசிய பேரங்களை நடத்துவதால் பரபரப்பு

சென்னை: கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளை இழுக்க அதிமுக, பாஜ போட்டி போட்டு ரகசிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். அதில் பெரும்பான்மையான கட்சிகள் எடப்பாடியுடன் கூட்டணிக்கு சம்மதித்துள்ளன. இதனால் அண்ணாமலையுடன் 2 சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணி போடும் நிலை தற்போது உருவாகியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, பாஜ இடையே கூட்டணி ஏற்பட்டது. எடப்பாடி தலைமையிலான நான்கரை ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மோதிக் கொண்டனர். இருவரும் கட்சியை உடைத்தனர். ஆனாலும் அதிமுக எடப்பாடி கைக்கு சென்றது. பன்னீர்செல்வம், கட்சிக்காக போராடி வருகிறார். இந்நிலையில் அதிமுகவுக்கும் பாஜவுக்கும் மோதல் ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நாடாளுமன்ற தேர்தலில் தேனியை தவிர மற்ற அனைத்து தொகுதியிலும் அதிமுக, பாஜ கூட்டணி தோற்றது. அதில், அதிமுக-பாஜ கூட்டணியில் வாசனின் தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமமுக உள்ளிட்ட சிறிய கட்சிகள் போட்டியிட்டன. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 65 இடங்களிலும், பாஜ 4, பாமக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேமுதிக மட்டும் கூட்டணியில் இருந்து வெளியேறி, டிடிவி. தினகரனுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி உடைந்து விட்டதால், ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் யாருடன் கூட்டணி செல்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளன. அதில், புதியநீதிக்கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமமுக ஆகிய கட்சிகள் மட்டுமே தற்போது பாஜ கூட்டணியில் உள்ளன. பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் எந்த கூட்டணிக்கும் ஆதரவு தராமல் இருந்தன. இந்நிலையில், பாஜவுடன் தொடர்பில் உள்ள கட்சிகளை இழுக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2 வாரமாக கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்ைத நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தே எஸ்டிபிஐ கட்சி, அதிமுக கூட்டணியில் சேர்ந்தது.

அதை தொடர்ந்து, தேமுதிகவின் பிரேமலதா, சுதீஷ் மற்றும் பாமகவில் அன்புமணி, வாசன், கிருஷ்ணசாமி ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து ரகசியமாக பேசி வந்தார். இந்த கட்சி தலைவர்களில் பலர் தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் பணம் தரமாட்டோம் என்று பேச்சுவார்த்தையை தொடங்கியவர்கள், பின்னர் கொடுக்க சம்மதித்தனர். அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்தது. இந்நிலையில், ஜி.கே.வாசன் மட்டும் குழப்பத்தில் இருந்தார். அவருக்கு 4 மக்களவை தொகுதியும் செலவு தொகையும் தருவதாக வேலுமணி உறுதி அளித்துள்ளார். ஆனால் பாஜ கூட்டணியில் வாசனுக்கு 2 சீட்டும், ஒன்றிய அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஒன்றிய அமைச்சர் பதவிக்கு வாசன் ஆசைப்படுகிறார். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்தால்தான் சட்டமன்ற தேர்தலில் ஒரு சில சீட்டுகளை பெற முடியும். ஆனால், இதுவரை உங்களுடன் பயணித்தோம். எங்களுக்கு எந்த பலனும் இல்லை. உங்களுக்கு மட்டுமே பலன். இப்போதும் உங்கள் நலனைப் பார்த்தால் இருக்கும் தொண்டர்களும் வெளியேறி விடுவார்கள். கட்சியில் நீங்கள் மட்டும்தான் இருக்கும் நிலை உருவாகும் என்று வாசனிடம் நிர்வாகிகள் கூறிவிட்டனர். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடனும், சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க வேலுமணியிடம் வாசன் விருப்பம் தெரிவித்தார். அவரோ வந்தால், இப்போதே வாருங்கள். இல்லாவிட்டால் எப்போதும் வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வாசன் குழப்பத்தில் உள்ளார்.

அதிமுகவுடன் செல்வதே சிறந்தது என கட்சியினர் கூறுவதால் அதிமுகவா, ஒன்றிய அமைச்சர் பதவியா என்று யோசித்து வருகிறார். ஒன்றிய அமைச்சர் பதவியுடன் வெற்றி பெற்றால்தான் உண்டு. பாஜ மீது மக்கள் வெறுப்பு உள்ளது. இதனால், தோற்றால், கண்டிப்பாக மாநிலங்களவை எம்பி கொடுத்து அமைச்சராக்க மாட்டார்கள். எனவே, அதிமுகவுடன் செல்வதே சிறந்தது என கட்சியினர் தெரிவித்தனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறார். அவர் அதிமுகவுடன் செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேமுதிக, புதிய தமிழகம், பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜ தமிழக தலைவர் அண்ணாமலையோ யார் வந்தாலும் வராவிட்டாலும் பாஜ தனித்துப் போட்டியிட தயார் என்று கூறி 39 தொகுதிக்கும் பொறுப்பாளர்களை போட்டு வேலைகளை தொடங்கி விட்டார். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. மேலிடம் மட்டுமே வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோருடன் பேசி வருகிறது. இதனால் பாஜ கூட்டணியில் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே மிஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இன்னும் காலம் இருப்பதால் கூட்டணிக் கட்சிகளை இழுப்பதில் பாஜ மேலிடம் தீவிரமாக இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணிக் கட்சியினர் தங்களுக்கு தேர்தல் செலவுக்கு யார் அதிக பணம் தருவார்கள் என்று காத்திருக்கின்றனர். இந்த மாதத்திற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முடிவில் இரு கட்சியினரும் உள்ளதால் கூட்டணிக்குள் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளை இழுக்க அதிமுக, பாஜ போட்டா போட்டி: மாறி, மாறி ரகசிய பேரங்களை நடத்துவதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJ Bhota ,CHENNAI ,BJP ,Edappadi ,Annamalai ,Baja Bhota ,Dinakaran ,
× RELATED காலி மது பாட்டில்களை உடனடியாக...