×

தவறாக சம்பளம் நிர்ணயம் செய்துவிட்டு காவலரின் சம்பளத்தை பிடித்தம் செய்வதா?: ஆவடி போலீஸ் கமாண்டன்ட் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் எஸ்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்தேன். எனக்கு 6வது சம்பள கமிஷனின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ரூ.11,653 சம்பளம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2012ம் ஆண்டு ஜூலை மாதம் எனது சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டது. காரணம் கேட்டதற்கு எனக்கு தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும் அதனால், கூடுதலாக ரூ.56,363 சம்பளம் தரப்பட்டதாகவும் அதை படிப்படியாக பிடித்தம் செய்வதாகவும் பூந்தமல்லி 13வது பட்டாலியனின் கமாண்டென்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டில் இருந்து எனது சம்பளத்தில் 21 மாதங்கள் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

தவறான தகவலின் அடிப்படையில் கூடுதல் சம்பளம் தரப்பட்டிருந்தால் அதை பிடித்தம் செய்ய முடியும். ஆனால், மாநில அரசே தவறுதலாக கூடுதல் சம்பளம் தந்திருந்தால் அதை பணியாளரிடம் இருந்து பிடித்தம் செய்ய முடியாது. இதை உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் விளக்கியுள்ளது. எனவே, எனது சம்பளத்தை பிடித்தம் செய்வதற்காக பூந்தமல்லி 13வது போலீஸ் பட்டாலியன் கமாண்டென்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் சம்பளம் தவறாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக தரப்பட்ட சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, நீதிபதி, கடந்த 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மனுதாரரின் சம்பளம் எப்படி தவறாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பு உரிய விளக்கம் தர வேண்டும். சம்பள பிடித்தம் செய்யும் உத்தரவை பிறப்பித்த 13வது டிஎஸ்பி பட்டாளியன் காமாண்டென்ட் பிப்ரவரி 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post தவறாக சம்பளம் நிர்ணயம் செய்துவிட்டு காவலரின் சம்பளத்தை பிடித்தம் செய்வதா?: ஆவடி போலீஸ் கமாண்டன்ட் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Avadi Police Commandant ,CHENNAI ,S. Raja ,Avadi Tamil Nadu Special Police Battalion ,High Court of Chennai ,Aavadi Police Commandant ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...