×

அனைத்து நாடுகளும் நீதியை வழங்குவதில் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நீதியின்றி தேசத்தின் இருப்பு சாத்தியமில்லை. நீதியை வழங்குவதில் நாடுகளிடைய ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். காமன்வெல்த் சட்ட கல்வி சங்கத்தின் காமான்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று தொடங்கியது. ‘நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள் உள்ளன. சுதந்திரமான சுயராஜ்ஜியத்தின் வேரில் நீதி இருக்கிறது. நீதியின்றி தேசத்தின் இருப்பு சாத்தியமில்லை. கிரிப்டோ கரன்சி, இணையதள குற்றங்கள் போன்றவை புதிய சவால்களை முன்வைக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் நாடு முழுவதும் செயல்படுவதுடன், நிதியுதவி பெறுகின்றனர். காலத்துக்கேற்ப நீதி வழங்க சட்ட அமைப்புகளை மறுபரிசீலனை செய்வதும், மறுவடிவமைப்பதும் அவசியம். சில சமயங்களில் ஒரு நாட்டில் நீதியை உறுதிப்படுத்த மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இணைந்து செயல்படும் போது ஒரு நாட்டின் சட்டவழிமுறையை பிற நாடுகள் புரிந்து கொள்ள முடியும். புரிதல் அதிகரிக்கும்போது ஒருங்கிணைந்த சக்தி உருவாகி வேகமான நீதியை வழங்க ஊக்கம் தரும். இணைந்து செயல்படும்போது நீதியை வழங்குவதற்கான ஒரு கருவியாக அதிகார வரம்பு மாறும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

நீதிபதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது:சந்திரசூட்
மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘நீதிபதிகள் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதும், நீதிமன்றங்களில் கண்ணியத்துடன் நடந்து கொள்வதும், சட்ட நடவடிக்கைகளின் நேர்மையை உறுதி செய்வதும் அவசியம். தற்போது, தொழில்நுட்பம் நீதிக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவாகி வருகிறது. அது நீதியின் வேகத்தையும் அணுகலையும் மேம்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தவும் உதவுகிறது. அதேசமயம், தொழில்நுட்ப தீர்வுகள் சமத்துவமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை நாம் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

The post அனைத்து நாடுகளும் நீதியை வழங்குவதில் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,COMMONWEALTH LEGAL EDUCATION ASSOCIATION'S ,COMMONWEALTH CHIEF LAWYERS AND CHIEF ,PAWAN ,DELHI ,PM ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...