×

சிராக் என் ‘அதிர்ஷ்டம்’: சாத்விக் உற்சாகம்

சென்னை: தமிழ்நாடு மாநில அளவிலான யு-20 பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடைபெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் நேற்று லெஸ்லி லயா – அஜித் குமார் (சென்னை) இணை 2-0 என்ற நேர் செட்களில் தரண் ராஜ் (சென்னை) -கே.மீனாட்சி (காஞ்சிபுரம்) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசுக் கோப்பைகளை சர்வதேச பேட்மின்டன் வீரரும், இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரருமான சாத்விக் சாய்ராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாரிஸ் ஒலிம்பிக்சுக்கு இன்னும் தயாராகவில்லை. இன்னும் நாட்கள் இருக்கின்றன.

கடந்த சில போட்டிகளில் 2வது இடமே பிடிக்க முடிந்தது. எனவே, பயிற்சியாளர் ஆலோசனைப்படி ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியை தொடங்க உள்ளோம். அதற்கு முன்னர் நடக்க உள்ள போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவோம். தரவரிசையில் நம்பர் 1… நம்பர் 2 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் அது நிரந்தரமானது இல்லை. அது குறித்து கொண்டாடவோ கவலைப்படவோ எதுவும் இல்லை. சிராக் ஷெட்டி பார்ட்னராக கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் மொழி பிரச்சனை இருந்தது. நான் தெலுங்கில் பேசுவேன். அவர் இந்தியில் பேசுவார். புரிதல் சற்று கடினமாக இருந்தது. பின்னர் எங்கள் நட்பு இறுக்கமானதால் அது களத்திலும் வெளிப்பட ஆரம்பித்தது. அதன் பிறகு இலக்கை நோக்கி நாங்கள் நகர ஆரம்பித்தோம். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை நெருக்கடியாக நினைக்கவில்லை. ஆனால், அதற்கான இலக்கு இருக்கிறது. அதை எட்டுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது’ என்றார்.

The post சிராக் என் ‘அதிர்ஷ்டம்’: சாத்விக் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Fortune ,Satvik ,Chennai ,Tamil Nadu State Level U-20 Badminton Tournament ,Leslie Laya ,Ajith Kumar ,Taran Raj ,K. Meenakshi ,Kanchipuram ,
× RELATED ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு