×

எம்எல்ஏக்களுக்கு ரூ25 கோடி பேரம் பேசியதாக கூறிய விவகாரம்; டெல்லி முதல்வர் வீட்டில் குற்றப்பிரிவு போலீஸ் குவிப்பு: ஆதாரம் கேட்டு நோட்டீஸ் வழங்கிய நிலையில் திடீர் பரபரப்பு


புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி பேரம் பேசியதாக கூறிய விவகாரத்திற்கு ஆதாரம் கேட்டு இன்று டெல்லி முதல்வர் வீட்டில் குற்றப்பிரிவு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங் ஆகியோரைத் தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நெருங்கி வருகிறது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஒவ்வொருமுறையும் சம்மன் அனுப்பும்போதும், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். இதுவரை 5 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் அனைத்து சம்மன்களையும் நிராகரித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், பாஜக தனது கட்சி எம்எல்ஏக்கள் ஏழு பேரைத் தொடர்புகொண்டு பேரம் பேசியதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதவில், ‘சமீபத்தில் அவர்கள் (பாஜக) எங்களின் டெல்லி எம்எல்ஏக்கள் ஏழு பேரைத் தொடர்புகொண்டனர். அப்போது, `இன்னும் சில நாள்களில் கெஜ்ரிவாலைக் கைது செய்துவிடுவோம். பின்னர் கட்சியில் எம்எல்ஏக்களை உடைப்போம். இதுவரை 21 எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. மற்றவர்களிடமும் பேசிவருகிறோம். அதற்குப் பிறகு ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்ப்போம். எனவே நீங்களும் எங்கள் கட்சிக்கு வரலாம். தலா ரூ.25 கோடி கொடுப்போம். பிறகு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடலாம்’ என அவர்கள் கூறியிருக்கின்றனர். 21 எம்எல்ஏக்களைத் தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்எல்ஏக்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர்.

இதன் அர்த்தம் என்னவென்றால், மதுபான ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக என்னைக் கைது செய்ய அவர்கள் முயலவில்லை. மாறாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்கள்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரூ. 25 கோடி பேரம் விவகாரத்தின் உண்மை தன்மை குறித்து, டெல்லியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அதனை தொடர்ந்து இன்று முதல்வர் அலுவலகத்திற்கு டெல்லி குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் குழு வந்தது. அவர்கள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, ெகஜ்ரிவாலிடம் ஆதாரங்களை சேகரிக்க வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கெஜ்ரிவாலின் வீட்டின் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post எம்எல்ஏக்களுக்கு ரூ25 கோடி பேரம் பேசியதாக கூறிய விவகாரம்; டெல்லி முதல்வர் வீட்டில் குற்றப்பிரிவு போலீஸ் குவிப்பு: ஆதாரம் கேட்டு நோட்டீஸ் வழங்கிய நிலையில் திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi Chief ,New Delhi ,Delhi ,Chief Minister ,Yes ,Delhi Chief's ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...