×

ஏர்வாடி மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

*நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

ஏர்வாடி : ஏர்வாடி மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது. நெல்லைக்கு-நாகர்கோவில் இடையே வளர்ந்து வரும் நகரங்களில் ஏர்வாடி ஒன்றாகும். திருக்குறுங்குடி, நம்பி தலைவன் பட்டயம், தளவாய்புரம், மாவடி, டோனாவூர், வடுகச்சி மதில், கோதைசேரி, சூரங்குடி, புளியங்குளம், வீராங்குளம், ராமகிருஷ்ணாபுரம், கோசல்ராம், ஆலங்குளம் போன்ற கிராமங்களில் உள்ளவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ஏர்வாடிக்கு தான் வருகின்றனர். இவ்வாறு வருவோர் தங்களது வாகனங்களை மெயின்ரோட்டின் இருபுறமும் நிறுத்தி வைத்துவிட்டு பொருட்களை வாங்க செல்கின்றனர். இதை தவிர்த்து அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் மெயின்ரோட்டில் எதிரெதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினருக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இந்தநிலையில் கடந்த டிச.17ம் தேதி பெய்த கனமழையால் ஏர்வாடியில் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது ஏர்வாடி பேரூராட்சியினர் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள வாறுகாலை உடைத்ததால் வெள்ள சேதம் தவிர்க்கப்பட்டது.

தற்போது அந்த வாறுகாலை சீரமைக்க பேரூராட்சியினர் டெண்டர் விட்ட பிறகும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் வாறுகால் சீரமைக்கும் பணி தாமதமாகிறது. வள்ளியூரில் நெடுஞ்சாலைத்துறையினர் மூன்று முறை ஆக்கிரமிப்பு அகற்றி விட்டனர். ஆனால் ஏர்வாடிக்கு மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஏர்வாடி வடக்கு மற்றும் தெற்கு மெயின் ரோட்டில் ஒரு சில வியாபாரிகள் கடைகளை சாலை வரை விரித்துள்ளனர். இதனை பார்த்து மற்றவர்கள் தங்கள் கடைக்கு வெளியே வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் ரோட்டின் இருபுறமும் பைக்கை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏர்வாடியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தடுக்கவும், வாறுகாலை உடனடியாக சீரமைக்கவும் ஏர்வாடி மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தகவல் தெரிவித்து பாரபட்சம் இல்லாமல் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர்.

The post ஏர்வாடி மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Airwadi Main Road ,Airwadi ,Highways Department ,Aerwadi ,Nellaiku-Nagarkoil ,Tirukurungudi ,Nambi ,Dinakaran ,
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...