×

கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வரவழைத்து கர்ப்பிணிகள் 15 பேருக்கு கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் கூறிய கும்பல்

*ஸ்கேன் கருவிகளுடன் ஒருவர் தப்பி ஓட்டம்

* பெண் புரோக்கர் டிரைவருடன் கைது

நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மானியதனஅள்ளி ஊராட்சி பரிகம் காட்டுவளவு உள்ளது. இந்த கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து சொல்வதாக, மாநில பாலினம் தேர்வை தடை செய் குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மாலை பரிகம் கிராமம் காட்டு வளவு பகுதிக்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தில் திருவிழா நடந்து வந்துள்ளது.

இதை வாய்ப்பாக பயன்படுத்திய அதிகாரிகள் சந்தேகம் வராதபடி உறவினர்கள் வீட்டிற்கு செல்வது போல் சென்று அதிகாரிகள் நோட்டமிட்டனர். அப்போது அதே பகுதியில், ஒரு வீட்டில் கர்ப்பிணி பெண்கள் 15 பேருக்கு பாலினத்தை கண்டறிந்து கூறிவிட்டு, கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் தப்பி ஓடிய விவகாரம் தெரிய வந்தது. மேலும் இவர்களை அழைத்து வந்த புரோக்கரான வணிதா(45) மற்றும் உதவியாக இருந்த கார் டிரைவர் முருகனையும் பிடித்து, தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்திய, தர்மபுரி மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி கூறியதாவது: இந்த 15 பெண்களும் ஜலகண்டாபுரம், மேட்டூர், ஓசூர்,சூளகிரி, காரிமங்கலம், பென்னாகரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். இவர்களிடம் 15 பேருக்கு பரிசோதனை செய்து, 13 பெண், 2 ஆண் குழந்தை எனவும் கூறியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளனர். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளில் இருக்கும் புரோக்கர்கள் ஒன்றிணைந்து கர்ப்பிணி பெண்களின் மனதை மாற்றி அழைத்து வந்துள்ளனர். இவற்றில் சிலர் வீட்டிற்கு தெரியாமல் கூட வந்துள்ளனர்.

கணவருடன் வரும் பெண்கள் இந்த வீட்டிற்கு தொலைவிலேயே நிறுத்திவிட்டு, கரடு முரடான பகுதியில் நடந்தே கூட்டி வந்துள்ளனர். மிகுந்த ஆபத்தான வழித்தடத்தில் அழைத்து வரும் பொழுது கூட கர்ப்பிணி பெண்களுக்கு கரு கலையவும் வாய்ப்பு உள்ளது. இதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த பெண்களிடம் பாலினத்தை கண்டறிவதற்காக, ஒரு நபருக்கு புரோக்கருக்காக ₹5,000 மற்றும் பாலினத்தை கூறும் மருத்துவருக்கு ₹13 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர்.

இது போன்ற சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து, வடிவேல் என்பவர் ஈடுபட்டு வருகிறார். கிடைக்கும் பணத்தை வைத்து கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர் மீது மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கவனம் செலுத்தி வங்கி கணக்குகளை முடக்கி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வடிவேலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு கூறினார்.

மேலும் கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்த புரோக்கர் வனிதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார் டிரைவர் ஆகிய இருவரையும், மருத்துவத்துறை அதிகாரிகள் பிடித்து தொப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். மேலும் பரிசோதனை கருவிகளுடன் தப்பிய ஓடிய வடிவேல் என்பவரை தேடி வருகின்றனர்.

The post கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வரவழைத்து கர்ப்பிணிகள் 15 பேருக்கு கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் கூறிய கும்பல் appeared first on Dinakaran.

Tags : Nallampally ,Maniathanalli Panchayat Parikam ,Dharmapuri district ,
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...