×

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிக்கு ₹365 கோடி ஒதுக்கீடு

*பாறசாலை – நாகர்கோவில் இடையே நில ஆர்ஜித பணிகள் தீவிரம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிக்கான நில ஆர்ஜித பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்கிடையே பட்ஜெட்டில் இந்த பணிக்காக ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில்வே வழித்தடத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை ரயில்பாதை பணிகள் தொடங்கின. 87 கி.மீ தூரம் இரட்டை ரயில்பாதை பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 37.59 ஹெக்டரும், பாறசாலை – கன்னியாகுமரி வரை தமிழக பகுதியில் 51.04 ஹெக்டரும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கேரள பகுதியில் 14.31 ஹெக்டேரும், தமிழ்நாடு பகுதியில் 10.54 ஹெக்டேரும் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு நில ஆர்ஜித பணிகள் மந்த கதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

குறிப்பாக கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே தமிழ்நாடு பகுதியில் இந்த பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெற்றது. கேரளாவில் 38 சதவீதமும், தமிழ்நாட்டில் 14 சதவீதமும் நில ஆர்ஜிதம் நடந்து முடிந்து இருந்தது. கேரள பகுதியில் நில ஆர்ஜிதத்துக்கு ரூ.1312 கோடியும், தமிழ்நாடு பகுதிக்கு ரூ.298.57 கோடியும் ரயில்வே வழங்கி உள்ளது.

தமிழ்நாடு பகுதிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் தற்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இதற்கிடையே திமுக அரசு பொறுப்பேற்றதும் ரயில்வே திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அந்த வகையில், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகளுக்கான நில ஆர்ஜித பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி சிறப்பு தாசில்தார் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். ஒன்றிய அமைச்சரை சந்தித்தும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிக்கு நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார். நில ஆர்ஜித பணிகளுக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது என்றும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி கட்டமைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேமம் – நெய்யாற்றின்கரை இடையே மார்ச் 2024க்குள் நில ஆர்ஜித பணி முடிவடையும். திருவனந்தபுரம் – நேமம், நெய்யாற்றின்கரை – பாறசாலை இடையே நில ஆர்ஜித பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. பாறசாலை – இரணியல், இரணியல் – நாகர்கோவில் சந்திப்பு இடையே இந்த மாத இறுதிக்குள் நில ஆர்ஜித பணிகள் முடிவடையும். நாகர்கோவில் – கன்னியாகுமரி இடையே நில ஆர்ஜித பணிகள் முடிவடைந்து, இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளம் பகுதிக்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன என்றனர்.

The post கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிக்கு ₹365 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Thiruvananthapuram ,Parasalai - ,Nagercoil ,Kanyakumari - ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?