×

மண்டபம் அருகே பரிதாபம் நாய்கள் கடித்து 13 ஆடுகள் பலி

மண்டபம் : மண்டபம் அருகே நாய்கள் கடித்ததில் 5 குட்டிகள் உட்பட 13 ஆடுகள் உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே சாத்தகோன்வலசை ஊராட்சி உடையார்வலசை கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் ஆடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சொந்தமாகவும், வங்கியில் கடன் வாங்கியும் செம்மறி ஆடுகள் வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று கிடை அமைத்து வளர்க்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ராமு வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள தோப்பில் விட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு உடையார்வலசை பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் இவருக்கு சொந்தமான 11 ஆடுகள் மற்றும் 7 குட்டிகளை கடித்துக் குதறின. இதில் 8 ஆடுகள் மற்றும் 5 குட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மற்றவை உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தன. நேற்று காலை ஆடுகளை பார்க்க வந்த ராமு, நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காயமடைந்த ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த சம்பவம் குறித்து மண்டபம் காவல் நிலையம் மற்றும் சாத்தக்கோன்வலசை விஏஓவிடம் ராமு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் ஆடுகள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்திற்கும் அதிமாக இருக்கும் என அவற்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

The post மண்டபம் அருகே பரிதாபம் நாய்கள் கடித்து 13 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Udayarvalasai ,Chattakonvalasai panchayat ,Mandapam, Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்