×

குமரி போக்குவரத்து ஊழியர் கொலையில் சரணடைந்த வக்கீலிடம் 2வது நாளாக போலீஸ் விசாரணை கேரள மாநில எல்லையில் பைக் மீட்பு

நாகர்கோவில், பிப்.3: குமரி போக்குவரத்து ஊழியர் கொலையில் சரணடைந்த வக்கீலிடம் 2 வது நாளாக விசாரணை நடந்தது. கேரள மாநில எல்லையில் உள்ள கிராமத்தில் இருந்து வக்கீலின் பைக் மீட்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு பகுதியை சேர்ந்த சேவியர்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், பங்குதந்தை ராபின்சன், வழக்கறிஞர் ரமேஷ்பாபு ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதில் பங்கு தந்தை ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்துள்ளது. வழக்கறிஞர் ரமேஷ்பாபு கடந்த ஜனவரி 29ம் தேதி நாகப்பட்டிணம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை பிப்ரவரி 1ம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று முன் தினம் காலை நாகப்பட்டிணத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ்பாபு இரணியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ரமேஷ்பாபுவை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அதன் பேரில் ரமேஷ் பாபுவை போலீசார் காவலில் எடுத்து இரணியல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த விசாரணையின் போது கொலை நடந்த அன்று யார்? யார்? இருந்தார்கள் என்பது பற்றி போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் சேகரித்து வைத்திருந்த தடயங்கள் தொடர்பாகவும் ரமேஷ் பாபுவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சம்பவ தினத்தன்று, ரமேஷ் பாபு மைலோடு பகுதியில் இருந்து பைக்கில் சென்றது தெரிய வந்தது. எனவே பைக் எங்கே? என்பது பற்றி விசாரித்தனர். அப்போது ரமேஷ்பாபு பைக் கேரள மாநிலம் நெட்டா பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷ் பாபுவை நேற்று முன்தினம் மாலையில் கேரள மாநிலம் நெட்டாவுக்கு அழைத்து சென்று பைக்கை மீட்டனர். பின்னர் இரணியல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. நேற்று 2 வது நாளாகவும் விசாரணை நடந்தது. சேவியர்குமாரை மிரட்டியதாக சமூக வலை தளங்களில் ஒரு ஆடியோ வெளியாகி இருந்தது. இது குறித்து ரமேஷ்பாபுவிடம் போலீசார் விளக்கம் கேட்டனர். அவர் கூறிய தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் குழுவினரிடம் விசாரணை
இந்த கொலைக்கு வாட்ஸ் அப் குழு அமைத்து மோசமான பதிவுகள் வெளியிட்டதே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இரு வாட்ஸ் அப் குழுக்களில் தான் அதிக பதிவுகள் வந்துள்ளன. இந்த வாட்ஸ் குழுக்களில் யார், யார் இருக்கிறார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி உள்ள போலீசார், கடந்த ஒரு வருடங்களாக இந்த குழுக்களில் என்னென்ன பதிவுகள் வந்துள்ளன. யார், யாரெல்லாம் பதிவுகள் வெளியிட்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையிலான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் கொலை நடக்க தூண்டுகோலாக பதிவுகள் இருந்தால் அது போன்ற பதிவுகள் வெளியிட்டவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post குமரி போக்குவரத்து ஊழியர் கொலையில் சரணடைந்த வக்கீலிடம் 2வது நாளாக போலீஸ் விசாரணை கேரள மாநில எல்லையில் பைக் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kerala state ,Nagercoil ,Kerala ,Mylodu ,Tingalchandi, Kumari district ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும்...