×

புதுவையில் போட்டியிட பாஜ அமைச்சர் மறுப்பு: தோல்வி பயத்தால் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்க தலைமை முடிவு; தேர்தலுக்கு ‘45 சி’ யார் தருவது என ரங்கசாமி தரப்பு கேள்வி

புதுச்சேரி: புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் திடீர் திருப்பதமாக பாஜ அமைச்சர் போட்டியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதியை மீண்டும் என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்க பாஜ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், புதுவை மக்களவை தொகுதியை பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி பச்சை கொடி காட்டினார். இதனால் பாஜ சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்த தலைமை முடிவு செய்தது. அவர் தயக்கம் காட்டியதால் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சர் ஆகலாம் என தலைமை கூறி உள்ளதாம். ஆனால் தேர்தலில் தோற்றால் அரசியல் வாழ்க்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கருதுகிறாராம்.

இதையடுத்து பாஜ சார்பில் போட்டியிட நியமன எம்எல்ஏ ராமலிங்கம், காரைக்கால் மதுபான ஆலை அதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மற்றும் பாஜ மாநில தலைவர் செல்வகணபதியுடன் கூடவே இருக்கும் மெத்த படித்தவர் ஒருவர் பெயரும் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டதாம். இதையடுத்து டெல்லி தலைமை நடத்திய ரகசிய சர்வேயில் திருப்தி இல்லையாம். மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டவில்லை. ரகசிய சர்வேயும் திருப்தி இல்லாததால் என்.ஆர்.காங்கிரசுக்கு சீட்டை ஒதுக்கி விட வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றால் நமக்கு தான் லாபம் என்ற கணக்கை போடுகிறதாம் பாஜ தலைமை. இதனால் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் பரவி வருகிறது.

இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி தரப்பினர் கூறுகையில், ‘நியமன எம்எல்ஏக்கள் பாஜவை சேர்ந்தவர்கள் வைத்து பூர்த்தி செய்து கொண்டனர். செலவு இல்லாமல், மாநிலங்களவை எம்பி சீட்டையும் பெற்று கொண்டனர். செலவு செய்யும் நாடாளுமன்ற தொகுதியை மட்டும் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கினால் எப்படி ஏற்று கொள்ள முடியும். தேர்தலை எதிர்கொள்ள குறைந்தபட்சம் 45 சி தேவைப்படும். பணத்துக்கு எங்கே போவது’ என்று குமுறினர்.

* ஆளுநர் தமிழிசை ராஜினாமா? இன்று அவசர டெல்லி பயணம்
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜ சார்பில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு ஒன்றிய அரசை அணுகி ஆளுநர் தமிழிசை அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்பி தேர்தலில் வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சராகலாம் என்று அவர் கணக்கு போட்டு காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கவர்னர் தமிழிசையிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘கவர்னராக தொடர்வதா? அல்லது வேட்பாளராக மாறுவதா? என்பதை முடிவு செய்துவிட்டு கூறுகிறேன்’ என்றார். இதன் மூலம் அவருக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், புதுவையில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்று வருகிற 16ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 2 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அடங்கிய புத்தகங்களோடு இன்று (3ம் தேதி) டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தனது சாதனைகள் காண்பித்து புதுவையில் போட்டியிட வாய்ப்பு கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமிருந்து கிரின் சிக்னல் கிடைத்தால், உடனே அவர் புதுச்சேரி கவர்னர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுவையில் போட்டியிட பாஜ அமைச்சர் மறுப்பு: தோல்வி பயத்தால் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்க தலைமை முடிவு; தேர்தலுக்கு ‘45 சி’ யார் தருவது என ரங்கசாமி தரப்பு கேள்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Puduvai ,NR Congress ,Rangaswamy ,Puducherry ,N.R. ,Congress ,Dinakaran ,
× RELATED புதுவையில் வாக்கு சேகரிப்பில்...