×

மல்லாங்கிணறு பேரூராட்சியில் குடிநீர் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

 

காரியாபட்டி, பிப். 3: மல்லாங்கிணறு பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மல்லாங்கிணறு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் துளசி தாஸ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மிக்கேல் அம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் மேலும் 2023-மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நடப்பு 2023 – 24ம் நிதி ஆண்டில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் 28 லட்சம் மதிப்பீட்டில் காந்தி நகர ஊரணி பராமரிப்பு பணிகள், சூரம்பட்டி கோவில்பட்டி பகுதிகளில் போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் சப்ளை செய்யும் பணிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் டிராக்டர் விநியோகம் செய்வது மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள், பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றுச் சுவர் அமைத்தல் உட்பட பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

கூட்டத்தில் தலைவர் துளசிதாஸ், துணைத் தலைவர் மிக்கேல் அம்மாள் ஆகியோர் பேசுகையில், மல்லாங்கிணறு பேரூராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், கோடை காலம் வருவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தண்ணீர் முறையாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் உதய செல்வி, செல்லம்மாள், அழகுராஜ், அனிதா, பாலச்சந்திரன், புகழேந்திரன், ராஜேஸ்வரி, மகாலிங்கம், கருப்பையா, செல்வராஜ், சுமதி, வைஷ்ணவி ஆகியோர் பங்கேற்றனர்.

The post மல்லாங்கிணறு பேரூராட்சியில் குடிநீர் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mallanginaru ,Kariyapatti ,Mallanginar ,President ,Tulsi Das ,Deputy Chairman ,Michael Ammal ,Dinakaran ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...