×

பொதுப்பணித்துறை ரூ.23 கோடியில் கட்டிய சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை: பொதுப்பணித்துறையால் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட சென்னை மண்டல தலைமைப்பொறியாளர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுப்பணித்துறையில் முதன்மை தலைமைப் பொறியாளர் அலுவலகமும், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன. சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு போதிய இடவசதி இல்லாததால், தனியாக கட்டிடம் கட்ட ஆலோசிக்கப்பட்டது. தலைமை பொறியாளர் (கட்டிடம்) சென்னை மண்டலத்திற்கான புதிய அலுவலக கட்டிடம் ரூ.23.05 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இது மூன்று தளங்களுடன் 1,04,049 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் தலைமைப் பொறியாளர் அறை மற்றும் அலுவலகங்கள், கோட்டப் பொறியாளர் அலுவலகங்களும், இரண்டாம் தளத்தில் தலைமை கட்டிடக் கலைஞர் அறை மற்றும் அலுவலகங்கள், நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடமும், மூன்றாம் தளத்தில் கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) அறை மற்றும் அலுவலகங்கள், கூட்ட அரங்கு மற்றும் பிற கட்டிட கட்டுமான உபகோட்டம் அலுவலகங்கள் செயல்படவுள்ளது. சென்னை, தரமணி, பொதுப்பணித்துறை வளாகத்தில் ரூ.35லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், பொதுப்பணித்துறை வளாகத்தில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகளிருக்கான உணவுக் கூடம் உள்ளிட்டவற்றை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 40 வகையான சிவில் உபகரணங்கள் மற்றும் 8 வகையான மின் உபகரணங்கள் ரூ.6.80 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கட்டுமானப் பொருட்களின் 45 வகையான பண்புகளை கண்டறிந்து தரத்தை உறுதி செய்ய முடியும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களின் பயன்பாட்டிற்காக ஆய்வக உபகரணங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்களிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தரமோகன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் அலுவலக கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், விளையாட்டு திடல்கள், நினைவகங்கள் போன்ற அரசு கட்டிட பணிகள் முதலியவற்றை இத்துறையின் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு திரை மூலம் காட்சிப்படுத்தப்படுகிறது.

* பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு மக்கள் வீழ்த்துவது உறுதி
திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க-பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த-மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பொதுப்பணித்துறை ரூ.23 கோடியில் கட்டிய சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai Zonal ,Public Works Department ,Minister ,Udayanidhi ,CHENNAI ,Udayanidhi Stalin ,Principal Chief Engineer's Office ,Chennai Zonal Chief Engineer's Office ,Chennai… ,Chennai Regional ,Engineer ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு...