×

நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை

சென்னை: நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு மேலாளர்கள், பொது விநியோக திட்ட துணை பதிவாளர்கள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு ‘பயோமெட்ரிக்’ கைரேகை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பின், அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கிட வேண்டும். ஆண்டுதோறும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு பரிசு வழங்கப்படும். அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உரிய காலத்தில் நகர்வு செய்து பொதுமக்கள் எப்போது வந்து கேட்டாலும் விநியோகம் செய்வதை உறுதி செய்திட வேண்டும்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கூட்டங்களில் உரிய அலுவலர்கள் கலந்து கொண்டு தெரிவிக்கப்படும் குறைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். வாடகை கட்டிடங்களுக்கு பதிலாக சொந்த கட்டிடங்கள் அனைத்து கடைகளுக்கும் அமைந்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு பணிகளான விலை கட்டுப்பாடு, பதுக்கல் தடுப்பு, நுகர்வோர் விழிப்பு பணிகள் போன்றவற்றிலும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையினர் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும்.

எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும். நெல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அந்த மண்டல முதுநிலை மேலாளர்களும் மண்டல மேலாளர்களுமே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கோபால், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakrapani ,Chennai ,Minister of Food and Nutrition ,A. Chakrapani ,Department of Food Supply and Consumer Protection ,Tamil Nadu Consumer Goods Trade ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...