×

தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் நடந்தது: நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை; ஆயுத புரட்சிக்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து சட்டவிரோதமாக, ஏமாற்றி நிதி பெற்றதாக குற்றச்சாட்டு; என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளிடம் இருந்து, சட்டவிரோதமாக ஏமாற்றி பல கோடி ரூபாய் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீடுகள் உள்பட 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் மூலம் தான் அதிகளவில் பணம் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. அவர் சீமானுக்கு தெரியாமலும் பெரிய அளவில் பணம் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் ஆயுதப்புரட்சிக்கு திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு (எல்டிடிஈ) தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களை தேசிய புலனாய்வு முகமை மற்றும் தமிழக காவல் துறையில் உள்ள கியூ பிரிவும் ரகசியமாக கண்காணித்து வருகிறது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அப்படி தஞ்சமடைந்த தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புகளுடன் ரகசியமாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், வெளிநாடுகளில் சிதறியுள்ள விடுதலை புலிகள் அமைப்பு ஒன்று சேர பல்வேறு முயற்சிகள் நடப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் கடந்த 2022 மே 19ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, வெடிமருந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கடத்தி வந்ததாக 2 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆயுதப்புரட்சி செய்ய வெடி மருந்து மற்றும் துப்பாக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையில் இருந்து என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. வெடி மருந்து மற்றும் துப்பாக்கி பிடிபட்ட வழக்கில் கோவையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி வீட்டிலும் சோதனை நடத்தி பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆயுதம் பதுக்கியதாக அவர்கள் மீது என்ஐஏ தனியாக வழக்கு பதிந்து, சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், விடுதலைப் புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப்போராட்டத்தை நடத்த முயன்றது தெரியவந்தது.

இதற்காக வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும், இந்த ஆயுதப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து நிதி உதவி பெற்ற நபர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நிதி உதவி பெற்றது தெரியவந்தது.

அதேநேரம், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் நிதி உதவி பெறுவதாக கூறி, அதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரில் தமிழகம் வழியாக போதைப் பொருளும் கடத்தப்பட்டு வந்துள்ளன. தமிழக அரசின் நடவடிக்கையால் இந்த போதைப் பொருள் கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பணம் பெரிய அளவில் தமிழகத்துக்கு சிலருக்காக வந்துள்ளன. அதன் அடிப்படையில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்ஐஏ அதிகாரிகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்ற நபர்கள் பட்டியலை எடுத்தனர்.

அதில் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகனின் திருச்சியில் உள்ள வீடு, கோவை ஆலாந்துறை பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார்(33), மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன்(40), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி(33) உள்ளிட்டோர் நிதி பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவே சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனித்தனி குழுக்கள் பிரிந்து, தமிழக போலீசார் உதவியுடன் நேற்று அதிகாலை 4 மணி முதல் 50 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை: கொளத்தூர் பாலாஜி நகர் 2வது குறுக்கு தெருவில் வசிக்கும் பொறியாளர் பாலாஜி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் குழு அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாலாஜி தற்போது பெங்களூரில் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியில் 7 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டவர். இவரது மனைவி சித்ராவிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

திருச்சி: திருச்சி வயலூர் சண்முகா நகரில் நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிற்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 5 பேர் என்ஐஏ அதிகாரிகள் குழு போலீசார் பாதுகாப்புடன் சென்று சோதனை நடத்தினர். அப்போது சாட்டை துரைமுருகனின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்தனர். சோதனையில், லேப்டாப், பென் டிரைவ், சிடிகள், பல்வேறு பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

யூடியூபரான சாட்டை துரைமுருகன் மூலம் தான் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி பெற்றதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், சாட்டை துரைமுருகன் படுக்கை அறையில் மனைவி மாதரசிக்கு தெரியாமல் ரகசியமாக ஒரு பையில் வைத்திருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியாமல்தன்னிச்சையாக விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிக்க சாட்டை துரைமுருகன் வரும் 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அவரது மனைவி மாதரசியிடம் அதிகாரிகள் சம்மன் அளித்துவிட்டு சென்றனர்.

கோவை: கோவை ஆலாந்துறை பழைய போஸ்ட் ஆபீஸ் வீதி ஆர்.ஜே. நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(33). இவர், நாம் தமிழர் கட்சி தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் உறுப்பினர். அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை 6.30 மணி முதல் சோதனை நடந்தினர். இதில், 2 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு சிம்கார்டு, ஒரு மெமரிகார்டு பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது ரஞ்சித்குமார். அவர் செல்போன் மூலம் வெளிநாடுகளில் உள்ள நபர்களுக்கு அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது செல்போன் மற்றும் வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர். பிறகு நேரில் ஆஜராகும்படி சம்மன் அளித்துவிட்டு சென்றனர். மேலும், கோவை காளப்பட்டியில் உள்ள முருகன் என்பவர் வீட்டிலும் 5க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தி ஆவணங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ராயகிரி விஸ்வநாதபேரி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் இசை மதிவாணன்(39). இவர் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர். இவரது வீட்டில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அவருக்கு சொந்தமான விஸ்வநாதப்பேரி ஸ்டூடியோவிலும் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை பகல் 11 மணி வரை நீடித்தது. மேலும் இசை மதிவாணனிடமும், அவரது குடும்பத்தினருடமும் விசாரணை நடத்தி வீடியோ பதிவு செய்தனர்.

பின்னர் என்ஐஏ ஆய்வாளர் சிபின்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் பீமுடு ஆகியோர் 3 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், இசைமதிவாணனின் ஆதார் கார்டு ஜெராக்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை பெற்றுக்கொண்டனர். அவர், வரும் 7ம் தேதி சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். இசைமதிவாணன் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாதக சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பகைவரைவென்றானைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப் (25). நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர். மனைவி துர்காதேவி மற்றும் ஒரு குழந்தையுடன், வாடகை வீட்டில் குடியிருந்து வசிக்கிறார். மேலும் தென்னகம் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இவர் இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்பில் இருப்பதாக கூறி, இவரது வீட்டில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் 6 பேர் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். 5 மணிநேரம் நடந்த சோதனையின் போது, விஷ்ணு பிரதாப், அவரது மனைவி ஆகியோரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

சோதனையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கம் சார்ந்த 7 புத்தகங்கள், ஒரு செல்போன் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், வரும் 8ம் தேதி சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விஷ்ணு பிரதாப் ஆஜராக உத்தரவிட்டனர். என்ஐஏ அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் நாம் தமிழர் அமைப்பை சேர்ந்த மாநில நிர்வாகிகள் பலர் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கங்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரது வீடுகள் உள்பட 50 இடங்களில் ஒரே நேரத்தில் என்ஐஏ சோதனை நடத்தியது அரசியல் வாட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* முக்கிய நிர்வாகிக்கு நேரில் ஆஜராக சம்மன்
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளராக முத்துப்பேட்டையை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் உள்ளார். இவர், அந்த கட்சி பேச்சாளராகவும் உள்ளார். தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திடம் இருந்து நிதி உதவி பெற்றதாக இடும்பாவனம் கார்த்திக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் அவரை நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ மண்டல தலைமை அலுவலகத்தில் ஆஜராக அவரது வாட்ஸ் அப்புக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தற்போது வெளியூரில் இருப்பதால் வரும் 5ம் தேதி நேரில் ஆஜராவதாக தெரிவித்துள்ளார் என்று அதிகாரிகள் கூறினர்.

* பறிமுதல் செய்த ஆவணங்கள் விவரம்
சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி ஆகிய 5 இடங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் நேற்று நடந்த சோதனையில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் மெமரி கார்டுகள், 4 பென் டிரைவ்கள், விடுதலை புலிகள் மற்றும் அதன் தலைவரான பிரபாகரன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் நடந்தது: நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை; ஆயுத புரட்சிக்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து சட்டவிரோதமாக, ஏமாற்றி நிதி பெற்றதாக குற்றச்சாட்டு; என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Liberation Tigers ,N. I. A. Officers Action Action ,Chennai ,Chhatti Duraimurugan ,Liberation League ,India ,N. I. A Officers Action ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமோக வெற்றி