×

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான எம்எல்ஏவின் மகன், மருமகள் ஜாமீன் மனு: சென்னை அமர்வு நீதிமன்றத்தில் 6ம் தேதி உத்தரவு

சென்னை: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜனவரி 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்பதால் இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர் என்று வாதிட்டார். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.பா.மோகன், எஸ்.சி., எஸ்.டி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டி.எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ஆய்வாளர் தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும். வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்ற சட்டம் இருக்கும் நிலையில் இந்த பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவு தவறாக பயன்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்றார். காவல்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீது பிப்ரவரி 6ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

 

The post வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான எம்எல்ஏவின் மகன், மருமகள் ஜாமீன் மனு: சென்னை அமர்வு நீதிமன்றத்தில் 6ம் தேதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MLA ,Chennai Sessions Court ,Chennai ,Neelangarai All Women ,Station ,Constituency ,E. Karunanidhi ,Ando Mathivanan ,Marlina ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...