×

வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கரும்பு விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவள்ளூர்: மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது, கரும்பு விவசாயிகளுக்கு பயிர் கடனுதவி நிபந்தனையில்லாமல் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. திருவாலங்காட்டில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை அதிகளவில் பிழியும் திறன் கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும்.

கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடனுதவிக்கு அணுகினால், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்க பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கடனுதவி எனக்கூறி அலைக்கழிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே, கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கடனுதவி வழங்க வேண்டும். அதேபோல், விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி வழங்கப்படும் ரூ.3 லட்சம் கடனுதவியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இந்த நிதி மூலம் விளைநிலங்களில் வாழ்வாதாரத்திற்கான பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும், விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை உரச்செலவுக்கு வழங்கப்படும் கௌரவ நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் மிக்ஜாம் புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகையை விரைந்து பெற்று தர வேண்டும். அதோடு, இந்தப் புயலால் சேதமடைந்த கால்வாய் கரைகள், ஏரிக்கரைகள் ஆகியவைகளை விவசாயிகள் நலன் கருதி சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது: கரும்பு பயிரிடும் விவசாயிகளை மையமாக வைத்து திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அதிகளவில் விவசாயிகள் பெயர் பதிவு செய்து கரும்பு வழங்க முன்வர வேண்டும். இதுபோன்று செய்வதன் மூலமே கூட்டுறவு அமைப்புகள் வலுப்பெறும். அதனால், கரும்பு விவசாயிகளுக்கான கடனுதவியை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் நிபந்தனையில்லாமல் வழங்குவது குறித்து ஆலோசனை கட்டாயம் செய்யப்படும்.

இதனைத்தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் த.பிரபு சங்கர் வழங்கினார். இதில் வேளாண் இணை இயக்குநர் க.முருகன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவள்ளி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் மலர்விழி, வேளாண் துணை இயக்குநர் சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கரும்பு விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,District Collector ,T. Prabhu Shankar ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...