×

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது முனையமாக மாறுகிறது வில்லிவாக்கம் ரயில் நிலையம்: திட்ட அறிக்கை தயார்

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூரை அடுத்து தாம்பரம் ரயில் நிலையம் 3வது ரயில் முனையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை 4வது முனையமாக தெற்கு ரயில்வே மேம்படுத்த உள்ளது. இதற்கு தேவையான நிலம் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ள சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்தால் 2 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருக்கும். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட சென்னையில் தினசரி போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்வது எளிதானது அல்ல. சென்னையில் புறநகர் ரயில் சேவை மட்டும் இல்லை என்றால், பொது போக்குவரத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பல லட்சம் மக்கள் புறநகர் ரயில்களை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். சென்னைக்கு வரும் ரயில்கள் தற்போது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வருகின்றன. வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலங்கானா, டெல்லி (தென்மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் எழும்பூரிலும் நிற்கின்றன. இதில், எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இனி தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில், அந்தோதியா ரயில் உள்ளிட்டவை தாம்பரம் வரை தான் வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையம் முழுமையாக மேம்படுத்தப்பட்ட பிறகு மேலும் சில புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, தண்டவாளம், ரயில் நிலைய நடைமேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பிறகு நிச்சயம் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தாம்பரம் சென்னை நகரத்திற்குள் இருக்கும் நிலையில், அந்த பக்கம் சென்ட்ரலுக்கு அடுத்து உள்ள உள்ள ரயில் நிலையமான அரக்கோணம் 80 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

இதனால் சென்னை நகருக்குள்ளேயே 4வது ரயில் முனையம் அமைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே முடிவு செய்தது. தற்போது சென்னைக்குள் வரும் ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று தான் செல்கின்றன. ஆனால் போகும் போது பெரம்பூரில் நிற்காது. அங்கு பெரிய அளவில் இடவசதிகள் இல்லை. இதனால் அங்கு முனையம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி இடம் உள்ள காரணத்தால் அங்கு 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை 4வது முனையமாக தெற்கு ரயில்வே மேம்படுத்த உள்ளது. அங்கு தேவையான நிலம் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு வருகிறது, என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது முனையமாக மாறுகிறது வில்லிவாக்கம் ரயில் நிலையம்: திட்ட அறிக்கை தயார் appeared first on Dinakaran.

Tags : Villivakkam railway station ,Central, Egmore, Tambaram ,Chennai ,Tambaram railway station ,Central ,Egmore ,Southern Railway ,Central, Egmore, ,Tambaram ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...