×

தூயதமிழ் அகராதி வழங்கும் நிகழ்ச்சி மாணவர்கள் நல்ல தமிழ்சொல்லை பேசி பழகலாம்: அகரமுதலி இயக்குனர் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு வளர்ச்சித்துறை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், வட்டம் புன்னமை தியாகராயர் நாயக்கர் ஊராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, நற்றமிழ் அறிவோம் என்னும் தூயதமிழ் அகராதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  அகரமுதலி இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை தாங்கி, மாணவ -மாணவிகளுக்கு நற்றமிழ் அறிவோம் என்ற அகராதி புத்தகத்தினை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில்;

“அகராதியில் உள்ள நல்ல தமிழ் சொற்களை மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் பயன்படுத்த வேண்டும், சுற்றுச்சூழலில் உள்ள வாழ்வியல் சொற்களையும் பொருள் உணர்ந்து தமிழில் பேசவேண்டும், அன்றாடம் நாம் பயன்படுத்துகிற பொருட்களின் பெயர்களை தமிழில் பொருள் உணர்ந்து, அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சொற்களை பேசி பழகவேண்டும் என்கின்ற ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சிறுவர்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் வகையிலும் படத்தோடு இந்த அகராதி அச்சடிக்கப்பட்டுள்ளது.

நற்றமிழ் அறிவோம் என்ற இந்த அகராதியின் துணைகொண்டு 1-5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ செல்வங்கள், படத்தை பார்த்து அதற்கான நல்ல தமிழ்ச்சொல்லை பேசி பழகலாம். எல்லாப்பொருள்களுக்கும் எல்லாச் செயல்களுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. அதனால்தான் உலக மகாகவி பாரதி, “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா!” என்று சொன்னார்.

இதனை, சிறுவயதிலேயே மாணவர்கள் புரிந்துகொண்டு அன்றாட வாழ்வியலில் தூய தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாடு அரசின் நற்றமிழ் அறிவோம் அகராதியை அரசு பள்ளிகளுக்கு சென்று வழங்கி கொண்டிருக்கிறோம். இன்றைய காலங்களில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது என்பது கடினமாக இருக்கும் சூழலில் வருங்கால மாணவ செல்வங்கள், தமிழில் எல்லா சொல்லுக்கும் பொருள் உண்டு என்பதை இந்த அகராதியின் மூலம் தெரிந்து கொள்வார்கள்.

அதன் பயனாக வருங்காலத்தில் அவர்கள் எந்த மொழியில் கல்வி கற்றாலும். தன் தாய்மொழியான தமிழில் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப பேசுவார்கள் என்பது உறுதி” என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், 4ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர், 5ம் வகுப்பு மாணவர்கள் 40 பேர் என மொத்தம் 60 மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தூயதமிழ் அகராதி வழங்கும் நிகழ்ச்சி மாணவர்கள் நல்ல தமிழ்சொல்லை பேசி பழகலாம்: அகரமுதலி இயக்குனர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Akaramudi ,Kanchipuram ,Tamil Nadu Government Development Department ,Senthamil Etymology Akaramudi Project Directorate ,Vattam Punnamai Thyagarayar Nayak Panchayat Primary School ,District ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...