×

ஊட்டியில் புதிய முயற்சியாக நாற்றுகள் மூலம் உருளைக்கிழங்கு உற்பத்தி

ஊட்டி: ஊட்டி அருகே புதிய முயற்சியாக நாற்றுகள் மூலம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் பணியில் விவசாயி ஒருவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பிக்கட்டி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மலை காய்கறி பயிர்கள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு அதிக பரப்பளவில் பயிரிடப்படுகின்றன.

நீலகிரியில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு சமவெளி பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கேரட் பொதுவாக விதையாக பயிரிடப்படுகிறது. உருளைக்கிழங்கை பொறுத்த வரை விதை கிழங்கு உற்பத்தி செய்து அதனை நடவு செய்து விளைவிக்கப்படுகிறது. இந்த நிலையில், விதையை பயன்படுத்தி உருளைக்கிழங்கு நாற்று உற்பத்தி செய்து அதை நடவு செய்வது தொடர்பாக நீண்ட காலமாக ஆய்வு நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தனியார் விதை உற்பத்தி நிறுவனம் ஒன்று சோதனை முயற்சியாக தாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகன் என்பவருக்கு உருளைக்கிழங்கு விதையை கொடுத்து நாற்று உற்பத்தி செய்து, அதை நடவு செய்ய வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. இதன்படி விவசாயி சண்முகன் உருளைக்கிழக்கு நாற்றை உற்பத்தி செய்து, தனது நிலத்தில் பயிரிட்டார். அவர் 5 சென்ட் நிலத்தில் பயிரிட்டத்தில் நல்ல விளைச்சல் அடைந்து 1,300 கிலோ உருளைக்கிழங்கு உற்பத்தியானது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் சுமார் 20 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியில் விவசாயி சண்முகன் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விவசாயி சண்முகன் கூறுகையில், தனியார் நிறுவனம் சோதனை முயற்சியாக தந்த விதையை பயன்படுத்தி கடந்த 6 மாதத்திற்கு முன்பு கடை போகமாக உருளைக்கிழங்கு நாற்று உற்பத்தி செய்து நடவு செய்தேன். நல்ல விளைச்சல் கிடைத்தது. அந்த நிறுவனம் நாற்று உற்பத்தி செய்து தருமாறு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, தற்போது விதையை பயன்படுத்தி உருளைக்கிழங்கு நாற்று உற்பத்தி செய்து வருகிறேன். இவ்வாறு விவசாயி சண்முகன் கூறினார்.

The post ஊட்டியில் புதிய முயற்சியாக நாற்றுகள் மூலம் உருளைக்கிழங்கு உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Ooty ,Kunnur ,Pikati ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்