×

தெளிவு பெறு ஓம்: பெண்கள் இப்போதெல்லாம் மாங்கல்யச் சரடு அணிவதில்லையே?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பெண்கள் இப்போதெல்லாம் மாங்கல்யச் சரடு அணிவதில்லையே?
– இளவரசி, வைத்தீஸ்வரன் கோவில்

பதில்: இப்பொழுது நாகரீகம் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நமக்குரிய நாகரீகம் போய், மேற்கத்திய நாகரிகத்தை நம்முடைய நாகரீகமாக பின்பற்றத் துவங்கிவிட்டோம். மஞ்சள் பூசுவதோ, மாங்கல்யச் சரடு அணிவதோ, கைகளில் வளையல்கள் அணிவதோ, நெற்றிக்கு திலகம் இடுவதோ, அநாகரீகம் என்றும், அனாவசியம் என்றும் கருதுகின்றனர். மாங்கல்ய சரடு தத்துவத்தையும், மகத்துவத்தையும் நம்முடைய பெண்கள் உள்ளபடி அறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு மாங்கல்யச் சரடே பிரம்ம முடிச்சு. பஞ்சபூத சக்திகள் நிறைந்தது மாங்கல்யம். அதை அணிவதில் சுமங்கலித்துவம் பளிச்சிடுகிறது. பருத்தி நூல் இழைகளால் ஆன மாங்கல்யத்துக்குத்தான், பஞ்சபூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருள் சக்தி உண்டு. சாதாரண மஞ்சள் தோய்ந்த மாங்கல்ய கயிறுக்கு ஒரு மகிமை உண்டு. தோஷங்கள் எதுவும் பாதிக்காது.

கர்மவினைகளின் வேகத்தைக் குறைக்கும். தாயாருக்குக் குங்கும அர்ச்சனை செய்தால் என்ன பலன் உண்டோ, அந்தப் பலன், ஒரு பெண் அணிகின்ற மாங்கல்யத்திற்கு உண்டு. உடனே போகும் உயிரைக்கூட அந்த தாலிச் சரடு மகத்துவம் காக்கும். தீவினைத் தோஷங்களின் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடு ஈர்த்து ஆத்மாக்கினியில் பஸ்பம் செய்துவிடும். மாங்கல்யமானது, ஒரு இல்லறம் ஏற்கும் பெண்மணியின் கழுத்தில் எப்போதும் திகழ்வதால், அதுவே தெய்வத் துணையாக இருந்து அவளுக்கு சுமங்கலித்துவத்தைக் கொடுக்கிறது.

?மனித இனம், தன்னுடைய நிம்மதிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா?
– அருண் சந்திரன், ஆற்காடு.

பதில்: நிச்சயமாகத் தெரியவில்லை. இன்று எதிலும் நிதானம் இல்லை. அச்சமும், படபடப்பும், வேகமும் எல்லா செயல்களிலும் இருக்கின்றன. நமக்குக் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? என்ற பரபரப்பு ஒவ்வொருவர் மனதிலும் இருந்து, வேகத்தைக் கூட்டி, பதற்றம் அடையச் செய்து, தடுமாற வைக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘‘நேரமில்லை. நேரமில்லை’’ என்கிற கூக்குரல்தான், எல்லாத் திசைகளிலும் இருக்கின்றது.

சரி, அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை. நின்று நிதானமாக உணவு உட்கொள்ளவோ, நல்ல முறையில் உறக்கம் கொள்ளவோ, பெற்ற பிள்ளைகளிடமும், பெற்ற தாய், தந்தையரிடமும், உறவினர்களிடமும் நேரத்தைச் செலவிடவோ முடியவில்லை என்று சொல்லுகின்றார்கள். எவ்வளவு பெரிய விசேஷமாக இருந்தாலும், புயல்போல வந்து, தலையைக் காட்டிவிட்டு, வந்த வேகத்திலேயே, ‘‘எனக்கு வேலை இருக்கிறது’’ என்று சென்றுவிடுகிறார்கள்.

எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்களும், கேளிக்கைகளும், செல்போன்களும் விழுங்கிவிட்டன. தொடுதிரையில் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கின்றார்கள். நகரங்கள் விரிவடைய, மனித மாண்பு வெகுவாகச் சுருங்கிவிட்டது. மூன்று வயது நிரம்பாத குழந்தைகள், மழலைக் காப்பகங்களுக்கும், ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஓடும் ஓட்டத்திற்கு, இந்த பிஞ்சுக் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிகூட தடையாகத் தென்படுகிறது.

30,40 வருடங்களுக்கு முன்னால் இருந்த கூட்டுக் குடும்பங்கள், தனிக் குடும்பங்கள் ஆகின. இப்போது தனிக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள். இனி, சொல்வதற்கு ஒன்றுமில்லை. மனித இனம் நிம்மதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இனி அதுவே நினைத்தாலும், நிறுத்தமுடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் சிந்தித்தால், இந்த வேகத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். அதற்கு ஆன்மிகம்தான் ஒரே வழி.

?மருத்துவ அறிவு, வேத காலத்தில் இருந்ததா?
– சா.வரதன், மாத்தூர்.

பதில்: மருத்துவ அறிவு, வேதகாலத்தில் அருமையாக இருந்தது. ஒளஷதங்கள், மருந்துகள் எனப்பட்டன. அதனை எந்த மூலிகையிலிருந்து பெறுவது, பயன்படுத்தும் காலம், பயன்படுத்தும் முறை, சொல்ல வேண்டிய மந்திரங்கள் என ஏராளமான விஷயங்கள் அதர்வண வேதத்தில் உண்டு.

?எது சொர்க்கம்? எது நரகம்?
– செல்வி.பாரதிபிரியா,திருப்புராத்துரை.

பதில்: மகிழ்ச்சி, சந்தோசம் ஆகியவை சொர்க்கம். துக்கம், வலி, வேதனை நரகம். இது வெளியில் இருக்கிறதோ இல்லையோ, நம் மனதில் இருக்கிறது. நம் செயல்களில் இருக்கிறது.
ஒரு கதை: ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால், யாருக்கும் உதவமாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும், நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்திற்கு கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும், அவருடன் சென்றான்.

முதலில் அவனை நரகத்திற்குச் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில், ஒரு பெரிய அண்டாவில் சாதம், குழம்பு மற்றும் சுவை மிக்க பதார்த்தங்கள் இருந்தன. அவர்களுக்குத் தட்டுகள் கொடுக்கப்பட்டன. சுவை மிக்க உணவு பரிமாறப்பட்டது. எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது.

ஆனால், எல்லோர் கையும் மடக்க முடியாதபடி கட்டப்பட்டிருந்தது. அந்தோ, பரிதாபம். அனைவராலும் கையை நீட்டி உணவுப்பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்குள் அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும், அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு அவற்றில் உள்ள உணவை வீணாக்கினர். தாங்க முடியாத பசியினால் உட்கார்ந்து அழுதனர்.

பின்னர், அந்த பெரியவர், கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதேபோல், அண்டாக்கள் நிறைய இருந்தன. அருமையான சாப்பாடு வைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும், கை அதே நிலையில்தான் இருந்தது. கையை நீட்ட முடிந்தது. மடக்க முடியவில்லை. அவர்களில் ஒருவர் நீட்டிய கையினால் இனிப்பு வகையை எடுத்து எதிரே இருந்தவர் வாயில் ஊட்டினார். மடக்கத்தானே முடியாது.

கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்ட முடியும் அல்லவா! உடனே அவர் ஒரு இனிப்பை எடுத்து இவர் வாயில் ஊட்டினார். இப்படி அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். இப்போது கருமியிடம் பெரியவர் கேட்டார். ‘‘சுவர்க்கம், நரகம் பற்றித் தெரிந்து கொண்டாயா? என்ன தெரிந்து கொண்டாய்?” என்றார்.

கருமி சொன்னான்; “பிறருக்கு உதவி செய்வது சொர்க்கம். அதனால், நமக்கு வேண்டியதும் கிடைத்துவிடும். யாருக்கும் உதவாமல் எல்லாவற்றையும் வீணாக்கித் துன்பப்படுவது நரகம்.” அது முதல் தன் செல்வத்தை, பிறருக்கு உதவி செய்வதற்குப் பயன்படுத்தி மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

?நான், யாரிடமிருந்து வாழ்க்கைக்குத் தேவையான பாடத்தை கற்றுக் கொள்ளலாம்?
– பி.எஸ்.விட்டல், மன்னார்குடி.

பதில்: பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் வந்துவிட்டால், யாரிடமிருந்து வேண்டுமானாலும் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஏன், இயற்கையே நமக்கு எத்தனைப் பாடங்களைச் சொல்லித் தருகிறது தெரியுமா? மரங்களைப் போல வாழ வேண்டும். நதிகளைப் போல வாழ வேண்டும். மேகங்களைப் போல வாழ வேண்டும் என்று இயற்கை பாடம் கற்றுத் தருகிறது. மரம், தன் பழங்களைத் தானே சாப்பிடாது. பிறருக்குத்தான் கொடுக்கும். நதி, தன் தண்ணீரை, தானே குடிக்காது. பிறருக்குத்தான் கொடுக்கும்.

மேகம், தன்னால் உற்பத்தியாகிற அன்னத்தை, தான் சாப்பிடாது. பிறருக்குத்தான் கொடுக்கும். அதைப்போல, நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதை இயற்கை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவி செய்யாத மனிதனை மிருகத்துக்குக்கூட ஒப்பிட முடியாது என்கிறார்கள். காரணம், மிருகங்களின் தோல்கூட நமக்குப் பயனாகிறது அல்லவா!

?உலகியலில்தான் இருக்கிறோம். ஆனால், ஒட்டாமல் வாழ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்களே, அது சாத்தியப்படுமா?
– முருகானந்தம், மதுரை.

பதில்: ஆன்மிகத்தில் மட்டுமே இது சாத்தியம். சாத்திர ஞானத்தால் பெற்ற, மனப்பக்குவத்தால் மட்டுமே சாத்தியம். அதற்கான முயற்சியைத்தான் ஆன்மிகம் வலியுறுத்துகிறது.
நாம் உலகியல் விஷயங்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி அணுகினால் நமக்கு அதனுடைய பாதிப்பு அதிகம் இருக்காது என்பதைத்தான் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

தண்ணீரில் தாமரை வளர்கிறது. தண்ணீருடன்தான் எப்பொழுதும் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால், பாருங்கள்.. அதன் இலை தண்ணீரோடு ஒட்டாமல் இருக்கிறது. தண்ணீரை நீங்கள் எவ்வளவுதான் அந்த இலைமீது ஊற்றினாலும் அது இலையில் தங்காது. வழிந்துதான் போகும். இதைப்போலத்தான் உலகியலில் நாம் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். அதனால், துன்பமின்றி தெளிவோடு வாழலாம்.

?வயதானவர்களை நான் எப்படி மதிக்க வேண்டும்?
– பிரசன்னவெங்கடேஷ், உசிலம்பட்டி.

பதில்: சாத்திரம் சொல்வதை நான் சொல்லுகின்றேன். மூன்று பேரை சாஸ்திரம் வணங்க வேண்டும் என்று சொல்லுகின்றது. குருஸ்தானத்தில் இருப்பவர்களை வணங்க வேண்டும். வயதில் பெரியவர்களை (வயோ வ்ருத்தா) வணங்க வேண்டும். ஞானத்தில் பெரியவர்கள் (இளையவர்களாக இருந்தாலும்) வணங்க வேண்டும். பொதுவாகவே, வயதானவர்களை, “தந்தையை எப்படி நடத்துவாயோ அதேபோல நடத்து” என்று சொல்லுகின்றது சாஸ்திரம்.

?ஒருவனுக்கு எந்த அளவுக்கு பணம் இருக்கலாம்?
– நாகராஜன், பாண்டிச்சேரி.

பதில்: இதற்கு எந்த அளவும் கிடையாது. தாயுமானவர் ஒரு அற்புதமான பாடலிலே இதைச் சொல்லுகின்றார்;
“ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக

அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி

நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே

ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.’’

ஒருவரிடத்திலே 100 கிலோ தங்கம் இருந்தாலும், யாராவது ஒரு வித்தைக்காரர், இரும்பைப் பொன்னாக்கும் வித்தை (ரசவாதம்) தெரிந்தவராக இருந்தால், அவரோடு ஓடிப் போய் அந்த வித்தையைக் கற்றுக் கொண்டு, இன்னும் நிறைய பொன் பொருளை சேர்க்க வேண்டும் என்று விரும்புவார்களாம். ஒரு விஷயம். யாராக இருந்தாலும் தேவைக்கு உட்பட்ட செல்வம்தான் அவனைச் சுமக்கும். தேவைக்கு அதிகமானால், அவன்தான் அதைச் சுமக்க வேண்டும்.

?மனிதன் எப்பொழுது பிறரை எதிர்பார்த்து நிற்க வேண்டிய அவசியம் வருகிறது?
– சிவமணிபிரகாசம்,மருந்தாண்டாங்குறிச்சி.

பதில்: மனிதனுக்கு தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பிறரை எதிர்பார்த்து நிற்க வேண்டிய அவசியம் அதிகரித்துக் கொண்டேபோகிறது.

? கடவுள் உண்டு என்பதற்கு மறுக்க முடியாத விளக்கம் இருக்கிறதா?
– அஞ்சனா ரவிகுமார், அரியலூர்.

பதில்: பண்டித ஜவஹர்லால் நேரு இங்கிலாந்தில் படித்த போது, அவர் அனுப்பும் பணத்தைச் சரியாகச் செலவு செய்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, அவருடைய தந்தையார் ஒரு கடிதம் எழுதினார். உன்னுடைய செலவுக் கணக்குகளை எல்லாம் அனுப்ப வேண்டும் என்று சொன்னாராம். அதற்கு ஜவஹர்லால் நேரு பதில் எழுதினார். ‘‘என் மீது நம்பிக்கை இல்லாமல் நான் எழுதி அனுப்பும் கணக்கை மட்டும் எப்படி நம்புவீர்கள்? ஆகையால் என் கணக்கு உங்களுக்குப் பயன்படாது’’ என்றாராம். அது போல, நம்பிக்கை உடையவருக்கு எந்த விளக்கமும் தேவைப்படாது. நம்பிக்கை அற்றவருக்கு எந்த விளக்கமும் பயன்படாது.

கவியரசு கண்ணதாசன் இது குறித்து மிக அருமையாக ஒரு பாடலை எழுதினார். அது திருமூலரின் திருமந்திரப் பாடலை ஒட்டியதுதான். இருந்தாலும், இந்தப் பாடல் மிக எளிமையாக இருக்கும். அந்தப் பாடலின் நான்கு வரி இதுதான்.

`தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை’
இதைவிட என்ன விளக்கம் தர முடியும்?

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறு ஓம்: பெண்கள் இப்போதெல்லாம் மாங்கல்யச் சரடு அணிவதில்லையே? appeared first on Dinakaran.

Tags : Vaideeswaran ,Temple ,
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...