×

நந்தி – சிவபெருமானின் தெய்வீகக் காளை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பாரத நாட்டின் கலாச்சாரத்தில் அனைத்து இயற்கைக் கூறுகளும் புனிதமாக கருதப்படுகின்றன. விலங்குகள், பறவைகள், புனித மரங்கள், புனித நதிகள், நிலம் மற்றும் மலைகளும் கடவுளின் அம்சமாக வழிபடப்படுகின்றன. வேளாண்மையில் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியை நல்கும் விழாவாக ‘மாட்டுப் பொங்கல்’ கொண்டாடப்படுகிறது.

இந்தியா ஒரு விவசாய நாடாக இருப்பதால், மக்களின் வாழ்வில் காளை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண்மைப் பணிகளுக்கு டிராக்டர்களின் பயன்பாடு அதிகரித்து இருந்தாலும், காளையின் பங்கு முக்கியமானது. அக்காலத்தில் கால்நடைகளே ஒரு பெரும் சொத்தாக கருதப்பட்டது. கால்நடைகளைப் பாதுகாக்கும் இறை வடிவை பூசித்துப் பணியும் வழக்கமாகவே சிவன் – காளை வழிபாடு உருவானது என்று நம்பப்படுகிறது. காளையுடன் கூடிய சிவன், பழமையான வழிபாட்டு வடிவங்களில் ஒன்றாகும். பொ.ஆ.மு.2500-க்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகத்தில் (பசுபதி முத்திரை, மொஹஞ்சதாரோ காளை) அதன் தடயங்களைக் காணலாம்.

‘நந்தி’ எனும் தெய்வாம்சம் பொருந்திய காளை வடிவம் வலிமை, செழுமை, நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மையின் குறியீடாகக்கருதப்படுகிறது. மற்ற கடவுள் வாகனங்களைப் போலல்லாமல், நந்தி சிவலாயங்களின் பாதுகாவலராக, ஒரு முழுமையான தெய்வீக உருவமாக தனியாக வணங்கப்படுகிறார். பல கோயில்களில் நந்திக்கு தனி மண்டபம் (நந்தி மண்டபம்) கூட உள்ளது. நந்தியின் தோரணை, சற்றே சாய்ந்தவாறு, அதன் கால்களையும் வாலையும் கீழே வளைத்து, தலையை உயர்த்திய நிலையில், அதே சமயம் சிவபெருமானைக் கண்கள் தாழ்ந்து காண்பது போல் சித்தரிக்கப்படும்.

நுணுக்கமான மணிகள், மாலை, அணி அலங்காரங்கள் அதன் நேர்த்தியை மேம்படுத்துகின்றன. புனிதமான இக்காளை வடிவத்தை, மக்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற தெய்வீக ஆசிகளை வேண்டி, வளமான பயிர்கள், சிறப்பான அறுவடைக்காக வழிபடுகின்றனர். தென் இந்தியாவின் பழங்கால சிவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நந்தி வடிவங்களின் ஒளிப்படத்தொகுப்பு: (அந்தந்த பகுதிகளுக்கே உரிய காளை இனங்களின் உடற்கூறு தன்மைகள், நந்திகளின் சிற்ப வடிவமைப்பில் வேறுபடுவதைக்காணலாம்)

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post நந்தி – சிவபெருமானின் தெய்வீகக் காளை appeared first on Dinakaran.

Tags : Nandi ,Lord Shiva ,India ,God ,
× RELATED காமதகனமூர்த்தி