×

இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தைபோல் தொன்மையாக திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்து வருபவர் முதலமைச்சர்: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று 1,000 ஆண்டுகள் தொன்மையான கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர், அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலை புனரமைக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவர்தந்த உற்சாகம் மற்றும் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை புதுப்பொலிவோடு வீறுநடைபோட்டு வருகிறது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷமான ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அத்திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள கடந்த இரண்டு நிதியாண்டுகளில் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கினார். இந்நிதியுடன் உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து 197 திருக்கோயில்களில் ரூ.304.84 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் 12 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுப் பெற்றுள்ளது. இன்றைய தினம் திருமுக்கூடலூர், அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலை புனரமைக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 11 திருப்பணிகள் மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு கடைசியாக எப்போது குடமுழுக்கு நடந்தது என்ற குறிப்பு இல்லாமல் இருந்தாலும், இங்குள்ள மணி முக்தீஸ்வரர் சன்னதிக்கு 2002 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்ததாக கல்வெட்டு இருக்கின்றது. இத்திருப்பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இத்திருக்கோயிலின் குடமுழுக்கை நடத்திடலாம்.

வரலாற்றில் நாம் படித்த வகையில் இராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில்தான் திருக்கோயில்கள் உயர்வு பெற்றன என்பார்கள். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் தான் இதுபோன்ற தொன்மையான திருக்கோயில்கள் புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தரும் சிறந்த ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் 400 ஆண்டுகளுக்கு பின் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பின் இராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கும் நேற்றைய தினம் 60 ஆண்டுகளுக்கு பின் மாமல்லபுரம், அருள்மிகு தலசயன பெருமாள் திருக்கோயிலுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 13 திருக்கோயில்கள் உள்பட இதுவரை 1,339 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான சோமூர், அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயிலை பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அத்திருக்கோயிலை புனரமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிதியாண்டிற்கான திருப்பணி பட்டியலில் சேர்த்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், இரா.மாணிக்கம் (குளித்தலை), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணைமேயர் ப.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், இந்து சமய அறநிலைத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை, உதவி ஆணையர்கள் நா.நந்தகுமார், பி.ஜெயதேவி, மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் கு.பால்ராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

The post இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தைபோல் தொன்மையாக திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்து வருபவர் முதலமைச்சர்: அமைச்சர் சேகர் பாபு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shekar Babu ,Rajaraja ,Chozhan ,Chennai ,Tamil Nadu ,K. ,Stalin ,minister ,Hindu ,P. K. SEKARBABU ,KARUR DISTRICT ,THIRUMKUTALUR ,ARULMIGU AGATHISWARAR TEMPLE ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...