×

முறைகேடுகள் செய்து அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதால் 2 பெண் ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம்: மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவு

திருவள்ளூர்: முறைகேடுகள் செய்து அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதால் 2 பெண் ஊராட்சி தலைவர்களை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக கீதா இருந்து வந்தார். ஊராட்சியில் கடந்த 2020-22 ஆண்டு வரை பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதன் மீது தணிக்கை செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், அப்போதைய மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் மனு அளித்தார். அந்த மனுவை பெற்ற கலெக்டர், தணிக்கை செய்ய ஊரக உதவி இயக்குனருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியை தணிக்கை செய்ய உதவி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர் தணிக்கை செய்ததில், ஊராட்சியில் கட்டிட வரைபடம் அனுமதி வழங்கப்பட்டதிலும், மின்விளக்குகள் உபகரணங்கள் வாங்கியதும் மற்றும் பழுது நீக்கியதில் முறையான கணக்கு இல்லாதது என ரூ.40 லட்சம் நிதியிழப்பு செய்தது கண்டறியபட்டது.

மேலும் ஊராட்சி தலைவரின் கணவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து கணக்குகளை பார்த்தது, கோப்புகளில் கையொப்பமிட்டது, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் கையொப்பத்தை தீர்மான நகல்களில் போட்டது, குடியரசு சுதந்திர தின விழாவில் பெண் ஊராட்சி தலைவரின் கணவரே தேசிய கொடியை ஏற்றியது உள்ளிட்டவை புகைப்படங்கள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 – பிரிவு 205 கீழ் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்யலாம் என கலெக்டருக்கு தணிக்கை செய்த அதிகாரி அறிக்கை அளித்திருந்தார்.

தணிக்கை அதிகாரியால் நிதியிழப்பு தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற ஆவணங்களை கொண்டு முன்னாள் வார்டு உறுப்பினர் பிரகாஷ் என்பவர் தணிக்கை அதிகாரிகள் அறிக்கை மீது முடிவு எடுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என கடந்தாண்டு நவம்பர் 27ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 4 வாரத்தில் கலெக்டர், தணிக்கை அறிக்கை மீது முடிவு எடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவு நகல் வந்து 2 வாரங்களிலேயே ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிட மாற்றத்தில் சென்றார்.

அதன் பிறகு வந்த புதிய கலெக்டர் பிரபுசங்கர், நீதிமன்றம் கொடுத்த 4 வார காலக்கெடு முடிந்தும் எந்தவித முடிவும் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்காமல் இருந்து வந்தார். இதனால் மனுதாரர், கலெக்டருக்கு தபால் மூலமாக புகார் மனு அளித்திருந்தார். அப்போது, மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணியில் இருப்பதால், முடிந்ததும் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்படும் என கலெக்டர் மனுதாரருக்கு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தாமரைப்பாக்கம் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் பிரகாஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மணிகண்டன் மூலமாக கலெக்டருக்கு நேற்று முன்தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதையடுத்து தாமரைபாக்கம் பெண் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா, அரசுக்கு வரவேண்டிய ரூ.19 லட்சத்து 42 ஆயிரத்து 171யை அரசுக்கு செலுத்தாமல் நிதியிழப்பு செய்தார். அதனால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)ன்படி வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதாவை கலெக்டர் த.பிரபுசங்கர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post முறைகேடுகள் செய்து அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதால் 2 பெண் ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம்: மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : District Collector ,Prabhu Shankar ,Thiruvallur ,Thiruvallur District ,Ellapuram Union ,Thamaraipakkam Panchayat Council ,President ,Geetha ,Dinakaran ,
× RELATED பொது விநியோகத் திட்டத்திற்காக...