×

மனவெளிப் பயணம்-தொட்டிலாட்டும் கை

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

வரலாறு வரலாறாக பெண்களின் வாழ்க்கையை மீட்டு எடுத்து வெளியே சொல்வதே மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. பெண்களின் வாழ்க்கையை வௌவால்கள் அல்லது ஆந்தைகள் போல்தான் வாழச் சொல்கின்றனர். விலங்குகளைப் போல் உழைக்கச் சொல்கின்றனர். புழுக்களைப் போல் இறக்கச் சொல்கின்றனர் என்பதை நியூகேசியைச் சேர்ந்த மார்க்கரெட் என்ற ஆங்கிலேயப் பெண்மணி 17ம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார். ஆனால் அந்தக் கருத்து இன்னும் மாறாமல் உள்ளது என்பதுதான் இன்னும் வேதனையைக் கூட்டுகிறது.

சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த டாக்டர் படமும், சித்தார்த் அவர்கள் நடித்த சித்தா படமும் குழந்தைகளின் பாலியல் வன்புணர்வை பேசியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை மீறி ஹியூமன் ட்ராபிக்கிங் பற்றி பேசிய படமாகத் தான் எனக்குப் புரிந்தது. பெண் குழந்தைகள் மட்டுமல்ல, வளர்ந்த பெண்களும் இதே போல், கடத்தப்படுகிறார்கள் என்பதுதான் வேடிக்கையாகவும், அவமானமாகவும் இருக்கிறது..

மனிதக் கடத்தல் என்பது ஒரு நாட்டின் மிகவும் வேதனையான, மிக அவமானமானசெயலாகத்தான் பார்க்க வேண்டும். அதிலும் அதிகமாக பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படுவதுதான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இந்தக் கடத்தல் என்ன காரணத்திற்காக நடக்கிறது என்றால் பெண்களின் உடலை அனுபவிப்பதாக இருப்பதும், உழைப்பை சுரண்டுவதாக இருப்பதுமே, முழுமுதற் காரணமாக இன்றளவும் உள்ளது. பெண்களை வெறும் தொட்டிலாட்டும் கையாகத்தான் இந்தச் சமூகம் பார்க்கிறது.

10-13 வயது பெண் குழந்தைகள் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் காணாமல் போகிறது என்று குற்றப்பத்திரிகை ஆய்வுகள் கூறுகிறது. 18 மில்லியன் பெண்கள் திருமணம் என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள். 59% இளம்பருவத்தினருக்கு தங்களை இந்தச் சுரண்டலிலிருந்து எப்படி தங்களை வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. 72% உள்ள பெண்களுக்கு எந்த அமைப்பு மூலம் வெளிவர வேண்டுமென்றும், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. பெண்களின் உழைப்பை எதை வைத்து, என்ன மாதிரி எல்லாம் சுரண்ட முடியும் என்பதற்கு அடிப்படையான நான்கு காரணங்களை ஹியூமன்டிராபிக்கமிஷன் அமைப்புகள் சொல்கிறார்கள்
.
1. Force : இன்றைய தேதியில் பெண்கள் தான் அளவுக்கு அதிகமாக வேலைக்குப் போகிறார்கள். அதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பெண்களை வைத்து பிச்சை
எடுப்பது, வீட்டுவேலைக்கு அனுப்புவது, குறைந்த சம்பளத்தில் தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்புவது, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது என ஒரு குழுவாக சேர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திக் கொண்டு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

குழந்தைகளைக் கடத்தவும், குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது எப்படி என்பது தான் ஹியூமன் ட்ராபிக்கிங் செய்பவர்களின் எண்ணமாக இருக்கிறது. வயதுக்கு வந்த பெண்களிடம் திருமண ஆசையைக் காண்பித்து, முறைப்படி திருமணம் செய்து அதன்பின் விற்று விடுகிறார்கள். பெண்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாவே மாற்றியும் விடுகிறார்கள். அதற்கு அடிப்படையாக, பெண்களின் உடலை மிக முக்கியமான காட்சிப் பொருளாக வைத்து சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். பெண்களின் உடலை அதன் பிம்பமாக வைத்து வாடகைத் தாயாக மாற்றுவது, உடல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உடலின் பாகங்களை விற்றுவிடுவது என ஒரு பொருளாகத்தான் இந்தச் சமூகம் பெண்களையும், குழந்தைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

2. Fraud : ஒருத்தனை ஏமாற்ற அவனின் ஆசையைத் தூண்டிவிடுவது தான் மிகத்தந்திரமான செயலாகும். அதைத்தான் இந்த இடத்தில் இங்கு உள்ள சமூகம் செய்துகொண்டு இருக்கிறது. முழுக்க முழுக்க மீடியாவின் பாதிப்புதான் இந்த இடத்தில் அதிகமாக இருக்கும். இவர்களின் டார்கெட் வறுமையில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை வைத்து தான் காய் நகர்த்தப்படுகிறது.

அந்த மாணவிகளின் வறுமையையும் மற்றும் ஆசையையும் வைத்து அவர்களை பயன்படுத்திவிடுகிறார்கள். டிவியில், போனில் காண்பிக்கப்படும் கவர்ச்சிகரமான உடைகள், அழகான நகைகள், பைக் மற்றும் காரில் ஊர் சுற்றுவது, ஹோட்டலில் விதவிதமாக சாப்பிடுவது என்று கூறி மாணவிகளை வீழ்த்திவிடுகிறார்கள். 71% மாணவிகள் அவர்கள் இருக்கும் பகுதிகளிலிருந்து, சில நிறுவனங்கள் மூலம் பாலியல் தொழிலில் இருக்கும் ஏஜெண்டுகள் மூலம் பயன்படுத்தப்படுகிறார்கள் என என்.ஜி.ஓ. நிறுவனங்கள் ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள்.

3. Coercion : இது ஒரு வகையான குடும்பம் சார்ந்து உணர்வு ரீதியாக வற்புறுத்தி பெண்களை அடிபணிய வைக்கிறார்கள். வயது முதிர்ந்த ஆணிற்கு பணத்திற்காகவும், சொத்துக்காகவும் பெண்ணைக் கல்யாணம் செய்து வைப்பார்கள். அடுத்தபடியாக உறவுகளுக்குள் சொத்து வேறு யாருக்கும் போய் விடக்கூடாது என்று சொந்தத்தில் இருக்கும் ஆணுக்கு வயது வித்தியாசம் பாராமல் பெண்ணை திருமணம் செய்து வைப்பது, பாலியல் தொழிலில் வீட்டிலுள்ள ஆண்களே பெண்களையும், குழந்தைகளையும் விற்றுவிடுவது என பல உணர்வு ரீதியான காரணங்களை வைத்து பெண்களை பலி கொடுத்து விடுகிறார்கள்.

இவை மட்டுமில்லாமல் கிராமங்களில் கடன் வாங்கிவிட்டு, வட்டி கட்டாமல்இருக்கும்போது, கடன் வாங்கியவரின் வீட்டிலுள்ள பெண்களை இழுத்துக் கொண்டு வட்டியும், அசலும் கொடுக்கும் வரை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். வட்டியும், அசலும் கொடுத்த பின்தான், அந்த வீட்டுப் பெண்களை கடன் வாங்கியவரின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். குடும்பத்துக்கு பாரம், பூமிக்கு பாரம் என்று சொல்லி சொல்லியே பெண்ணை தரித்திரம் என்ற சொல்லுடன் ஆழமாக முடிச்சு போட்டு மூடப்பழக்கவழக்க நம்பிக்கைகளை காரணமாக காட்டி அனைவரின் ஓத்துழைப்புடன் விற்றுவிடுகிறார்கள்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பாதி பெண்களை கொண்டு வந்துவிட்டவர்கள் எல்லாம் அவர்களின் குடும்ப நபர்கள்தான். அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அடிப்பது, ஊர் முன்னிலையில் அசிங்கப்படுத்துவது, வீட்டில் உள்ளவர்களே பாலியல் வன்புணர்வு செய்து துன்புறுத்துவது என அந்தப் பெண்களை மனத்தளவில், உடல் அளவில் நிலைகுலைய வைத்து விடுவார்கள். அதன் பின் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்லும் இடத்தில் வேலைக்குச் செல்வார்கள்.

4. Facilitaed by a Third Person : இவை எல்லாமே அடுத்த மனிதருக்காக செய்யும் ஒரு செயலாகும். வாக்கு தவறாமை என்று ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து அடுத்த மனிதர்களை திருப்திபடுத்துவதற்காக தங்கள் வீட்டுப் பெண்களையும், குழந்தைகளையும் தியாகம் செய்யச் சொல்வார்கள். அந்த வீட்டிலுள்ள ஆணின் பேராசைக்காக, நண்பர்களுடன், உறவுகளுடன் பகடைக் காயாக மாறி, பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யச் சொல்வார்கள்.

இது ஒரு வகையான சேடிஸ்ட் மனநிலையில் செய்வதாகும். குடும்பத்தில் உள்ள ஆண் சந்தோசமாக, ஆடம்பரமாக வாழ அவர்களை நம்பி இருக்கும் பெண்களையும், குழந்தைகளையும் வைத்து சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ்கிறேன் என்று வாழும் முறையாகும்.இதை எல்லாம் தடுக்க 2018ல் புதிய மசோதாவின்படி பாதிக்கப்பட்டவர்கள்புகார் அளித்தால் 30நாட்களுக்குள் இடைக்கால நிவாரணம், 60நாட்களுக்குள் முழு நிவாரணமும் கிடைக்க வேண்டும் என நம் இந்திய அரசாங்கம் சொல்கிறது.

இந்தச் சம்பவங்கள் எல்லாமே இந்த கொரோனோ காலகட்டத்தில், இன்னும் அதிகமாகிவிட்டது. காலநிலை மாற்றமும், இயற்கைச் சீற்றங்களும் வரும் போது எல்லாம் பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதிலும், பொருளாதார ரீதியாக மனிதர்கள் வாழ்வாதாரத்தை தொலைக்கும் போது, பெண்களும், குழந்தைகளும் அதிகமான சுரண்டலுக்கு உள்ளாவார்கள். சில இடங்களில் எல்லாம் வீட்டிலுள்ள ஆண்கள் மூலம் பெண்கள் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து, அவர்களின் உழைப்பையும் சுரண்டி, பணத்தையும் காலி செய்துவிட்டு பெண்களையும், குழந்தைகளையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விடுகிறார்கள்.

அதன் பின் மறுபடியும் முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள். அதில் அவர்களின் உடலின் வலிமையை இழந்து, மனதின் காயங்கள் எல்லாமே அதிகமாகி உலகின் மீது நம்பிக்கையற்று வாழ்க்கையை வாழ்வது என்பது, கொடுமையான விஷயமாகும். 2024 லும், பெண்களின் வாழ்க்கையை வெறும் தொட்டிலாட்டும் கையாகவே தான் இந்தச் சமூகம் இந்த நொடிவரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்த ஹியூமன் டிராஃபிக்கிங் ஆய்வுகள் நமக்கு நிரூபிக்கிறது.

The post மனவெளிப் பயணம்-தொட்டிலாட்டும் கை appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayatri Mahathi ,
× RELATED மனவெளிப் பயணம்