×

தாய்மை எனும் பேறு!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக் குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு மட்டுமல்ல வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரம்பமாய் அமையும். பிரச்னைகள் இல்லாமல் கர்ப்பகாலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச்னைகளைத் தடுக்கலாம்.

கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய வழிகள்

சமவீத உணவை உட்கொள்ளல்

பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

போலிக் அமிலம் மாத்திரைகள்

நீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கர்ப்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபாரிசு செய்துவருகிறார்கள். கீரை வகைகள், புரோக்கோலி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமிசம் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்

ஆரோக்கியமான கர்ப்பகாலம் மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள் (ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படாத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். வைட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழந்தைக்கு பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கலாம்.

ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்

சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரசவமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்)

தவிர்க்கவேண்டிய மருந்துகள்

கர்ப்பகாலத்தின்போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கர்ப்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர்கசிதல், கைகால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

டோக்சோ பிளாஸ்மோசிஸ்

இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கர்ப்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது பூனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

பரிசோதனை நேரம்

கர்ப்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிவர்த்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்

அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.

புகைபிடித்தலைத் தவிர்த்தல்

மேலைநாடுகளில் வாழ்ந்துவருவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும்போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

மேலும் சில துணுக்குகள்

நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கர்ப்பகால கையேட்டை எடுத்துச் செல்ல மறவாதீர்கள். இதில் ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வழக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.

சிறு வயதில் ருபெல்லா தடுப்பூசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கர்ப்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணுகி தடுப்பூசியைப் பெற்றுவிட்டு கர்ப்பமாவது அவசியம்.கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்புச் சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

ஆணின் பங்கு என்ன?

ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின் வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

நல்ல ஆரோக்கியமான உணவு

புகைபிடிப்பதைத் தவிர்த்தல் – புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.

மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்

இறுக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

தொகுப்பு: சரஸ்

The post தாய்மை எனும் பேறு! appeared first on Dinakaran.

Tags : Kunkum ,
× RELATED கவுன்சலிங் ரூம்