×
Saravana Stores

பெட்ரோலிய பொருட்கள் மட்டுமின்றி உரம், உணவு மானியம் வெகுவாக குறைப்பு: விவசாயிகள் உட்பட பலரும் பாதிக்க வாய்ப்பு

புதுடெல்லி: பெட்ரோலிய பொருட்கள் மட்டுமின்றி உரம், உணவிற்கு வழங்க வேண்டிய மானியம் வெகுவாக குறைக்கப்பட்டதால், விவசாயிகள் உட்பட பலரும் பாதிக்க வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட்டில், உணவு, உரம், பெட்ரோலியப் பொருட்களுக்கு ஒதுக்கப்படும் பல்வேறு மானியங்களுக்கான ஒதுக்கீடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் உர மானியத்திற்கு கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது (2024-25) உர மானியம் வெறும் ரூ.1.64 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே 2023-24ல் ஒதுக்கப்பட்ட மானியம் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 13.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய யூரியா மானியம், இதர உரங்கள் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (டிஏபி, எம்ஓபி) கடுமையாக பாதிக்கப்படும். சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைந்தாலும், ஒன்றிய அரசு நிதியை குறைத்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

நாட்டின் மொத்த உர நுகர்வில் யூரியா 55-60 சதவீதம் ஆகும். 45 கிலோ மூட்டை யூரியா ரூ.242க்கு மானிய விலையில் விவசாயிகள் பெறுகின்றனர். வெளிச்சந்தையில் ரூ.2200 அளவிற்கு விற்கப்படுகிறது. உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் தொடர்பான ஒதுக்கீடுகளையும் ஒன்றிய அரசு குறைத்துள்ளது. உணவுப் பொருட்களுக்கான மானியத்திற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.2,05,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.33 சதவீதம் குறைவு. மேலும், கடந்த ஆண்டு பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியமாக ரூ.12,240 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை ஒதுக்கீடு 2.6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்க வாய்ப்புள்ளது.

The post பெட்ரோலிய பொருட்கள் மட்டுமின்றி உரம், உணவு மானியம் வெகுவாக குறைப்பு: விவசாயிகள் உட்பட பலரும் பாதிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...