×

கீழடி அருங்காட்சியகத்தில் பழங்கால உலைகலன் மாதிரி அமைக்கும் பணி தீவிரம்

திருப்புவனம்: கீழடி அருங்காட்சியகத்தில் பழங்கால உலைகலன் மாதிரி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் நடந்த ஒன்பது கட்ட அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்கள், விவசாயம், நெசவுத்தொழில் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்திய தொல்லியல்துறை முதல் மூன்று கட்ட அகழாய்வை நடத்தியது. முதல் இரண்டு கட்ட அகழாய்வை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனும், மூன்றாம் கட்ட அகழாய்வை ஸ்ரீராமர் ஆகியோர் மேற்கொண்டனர். அப்போது கிடைத்த 5,500 தொல் பொருட்கள் கார்பன் பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வரவேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழக தொல்லியல்துறை 6 கட்ட அகழாய்வை நடத்தி முடித்துள்ளது. இவைகளில் கிடைத்த தொல்பொருட்கள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, வைக்கப்பட்டுள்ளன.

இதில், 13,608 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அகழாய்வு தளங்கள், வராஹி உருவம் பதித்த சூதுபவளம், சுடுமண் பானைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2,600 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஆயுதங்கள், கருவிகள் தயாரிக்கப்பட்டதற்கு சான்றாக, 5ம் கட்ட அகழாய்வில் மணலூரிலும் கீழடியிலும் உலைகலன் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பயன்பாடு குறித்த அனிமேஷன் படங்கள் அருங்காட்சியகத்தில் ஒளிபரப்பப்படுகின்றன. இதனைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள், பண்டை கால உலைகலனை காண ஆர்வம் காட்டினர். இதையடுத்து தொல்லியல் துறையினர் உலைகலனை காட்சிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அருங்காட்சியகத்தின் கல்மண்டபம் எதிரே, மாதிரி உலைகலன் வடிவமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் காண வசதியாக கண்ணாடி கூண்டும் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் சில தினங்களில் நிறைவடைந்து, பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

The post கீழடி அருங்காட்சியகத்தில் பழங்கால உலைகலன் மாதிரி அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Keezadi Museum ,Tiruppuvanam ,Geezadi ,Sivagangai ,
× RELATED திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை