×

வீடியோ காலில் பார்த்தே அளவெடுத்து விடுவேன்!

நன்றி குங்குமம் தோழி

ஆடை வடிவமைப்பாளர் யமுனா கேசவன்…

‘‘நான் தொழில் தொடங்கினதே என் அப்பாவின் இழப்பை மறப்பதற்குதான்’’ என சென்டிமென்டாக சொல்கிறார் யமுனா கேசவன். இவர் ஆடை வடிவமைப்பு துறையில் தற்போது தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு, அவ ரின் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அழகான உடைகளை வடிவமைத்து தருகிறார். திருச்சியில் K7 டிசைனர் என்ற கடையை நடத்தி வரும் யமுனா கேசவன் மணப்பெண்களுக்கான உடைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கஸ்டமைஸ்ட் உடைகளை அவர்கள் விரும்பும் வண்ணம் பிரத்யேகமாக அழகுற வடிவமைத்து தருகிறார்.

*ஆடை வடிவமைப்பில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

உண்மையில் இந்த ஆடை வடிவமைப்பு துறை தொழிலின் அரிச்சுவடி கூட எனக்கு தெரியாது. என் உறவினர் ஒருவர் தான் இந்த கடையை முதலில் நடத்தி வந்தார். ஒருமுறை திடீரென அவர் என்னிடம் இந்தக் கடையினை உங்களால் நடத்த முடியுமான்னு கேட்டார். எனக்கு முதலில் என்னால் செய்ய முடியுமான்னு சந்தேகம் இருந்தது. அவர் கேட்கிறார் என்று அவரின் டிசைனிங் யூனிட்டினை போய் பார்த்தேன். அத மிகப்பெரிய யூனிட்டாக செயல்பட்டு வந்தது. இவ்வளவு பெரிய யூனிட்டான்னு நானும் ஆச்சரியப்பட்டேன். சரி செய்து பார்ப்போம்ன்னு தான் ஒப்புக் கொண்டேன். அப்படி ஆரம்பித்ததுதான் K7 டிசைனர்ஸ். எனக்கு உடைகளை தைக்க தெரியாது. ஆனால் அருமையாக உடைகளை வடிவமைக்க தெரியும்.

சிறுவயதிலிருந்தே ஏனோ ஆடை வடிவமைப்பில் எனக்கு ஆர்வம் உண்டு. அதனால் தான் கஸ்டமர்கள் விரும்பும் வகையில் இன்று வரை ஆடைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து தர முடிகிறது. நான் இந்த துறைக்கு வரும் முன்பே எனக்கு மட்டுமில்ைல என் மகளுக்கும் சிறுவயதிலிருந்தே விதவிதமான உடைகளை போட்டு அழகு பார்ப்பேன். அவள் காலேஜ் செல்வதற்காக மட்டுமேயென ஏராளமான ஆடைகளை தைத்து தந்தேன்.

தினம் ஒன்றாக அவள் அணிந்து செல்வதே எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கும். அதைப் பார்த்து பலரும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். சிலர் என்னை ‘ஏன் நீ உடைகளை வடிவமைக்கக்கூடாது’ன்னு சொல்வாங்க. அப்போது எனக்கு இதை தொழிலாக எப்படி செய்வதுன்னு ஒரு சரியான திட்டம் இல்லை. இந்த கடை என் கைக்கு வந்ததும்தான் என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது.

*என்ன மாதிரியான உடைகளை வடிவமைக்கிறீர்கள்?

நான் ப்ரைடல் ப்ளவுஸ்களுக்கு நிறைய வகையான ஒர்க் செய்து தருகிறேன். மணப்பெண்களுக்கான உடையில் ப்ரைடல் ப்ளவுஸ்கள் அதீத முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்கள் விரும்பும் விலையில் தரமான டிசைன்களை உருவாக்கி அவர்கள் மகிழும் வண்ணம் செய்து தருவது ஆகப்பெறும் சவால். ஆனால் அதனை திறன்பட செய்வது என்பது நமக்கு அதிக வாடிக்கையாளரை பெற்றுத்தரும் சூட்சமம் எனலாம். தற்போது நவீன ட்ரெண்டுகளுக்கு ஏற்றவாறு டிசைன்கள் செய்து தர வேண்டும்.

அதுவும் இந்த துறையை பொறுத்தவரை பெரிய சவால் என்று தான் நான் சொல்வேன். ஆரி ஒர்க், எம்ப்ராய்டரி, பேட்ச் ஒர்க் போன்றவை பலராலும் விரும்பப்படுகிறது. நவீன காலத்து மணப்பெண்கள் தங்களது ஆடை தேர்வுகள் தொடங்கி மேக்கப், அலங்காரம், ஃபோட்டோஷூட் என எல்லாவற்றிலும் ஒரு முழுமையான தனித்துவத்தை எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக பெண்கள், தங்களது திருமண நாளில் தனியாக ஸ்பெஷலாக தெரிய நிறைய விஷயங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்கின்றனர்.

அதில் முக்கியமானது ப்ரைடல் ப்ளவுஸ்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் புடவை, அதற்கு மேட்ச்சாக பிளவுஸ், அதில் செய்யப்படும் வேலைப்பாடுகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தான் வடிவமைக்கிறார்கள். காரணம், அன்று அவர்களின் நாள் என்பதால், அவர்கள் அணியும் உடை அனைவரையும் கவர செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் கனவினை நிறைவேற்ற நாங்களும் உழைக்கிறோம்.

*வாடிக்கையாளர்கள் குறித்து…

தொழில் ஆரம்பித்த புதிதில் என்னைப் பற்றி பலருக்கு தெரியாது. காரணம் நான் அப்போது இந்த துறைக்கு புதிது. அதனால் விளம்பரம் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்று தான் என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன். பலருக்கு ரெகுலர் டிசைனர்கள் இருப்பாங்க. சிலர் புதிதாக இருக்கே டிரை செய்வோம்ன்னு வருவாங்க. அப்படி வந்தவங்க என் டிசைன் பிடித்து போய் இன்று வரை என்னுடைய வாடிக்கையாளராக தொடர்ந்து வருகிறார்கள். அவர்களை நானும் தக்க வைத்து வருகிறேன் என்று சொல்ல வேண்டும். நான் டிசைன் செய்யும் உடைகளை என் வலைத்தள பக்கத்தில் பதிவு செய்ேவன்.

அதைப் பார்த்தும் சிலர் வந்தார்கள். என்னுடைய பெரும்பாலான கஸ்டமர்கள் இணையம் மூலமாக வந்தவர்கள்தான். ஒரு வாடிக்கையாளரை நாம் திருப்தி செய்துவிட்டால், அவர்கள் மூலமாக நமக்கு மற்றொரு வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. அப்படித் தான் எனக் கான அடையாளம் கிடைத்தது. என்னுடைய தொழிலும் வளர ஆரம்பித்தது. இப்ப தமிழ்நாடு முழுவதும் எனக்கு கஸ்டமர்கள் இருக்காங்க. பல வாடிக்கையாளர்களை வீடியோ கால் மூலமாகவே அளவெடுத்து அவர்களின் உடைகளை தைத்து கொடுத்திருக்கிறேன். எனது உடை வடிவமைப்பின் நேர்த்தி மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி போன்றவையே நிறைய ஆர்டர்களை பெற்றுத் தருகிறது.

*தொழிலில் சவால்களாக எதை நினைக்கிறீர்கள்?

இந்த தொழிலைப் பொறுத்தவரை முதலில் நமது வாடிக்கையாளர்களை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்வதே பெரிய சவால். காரணம், இந்த தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய தவறினால், அவர்கள் வேறு டிசைனரை தேடி போயிடுவாங்க. அந்த வகையில் எனக்கு பல வருடங்களாக நல்ல பல தொழிலாளிகளும், வாடிக்கையாளர்களும் அமைந்துள்ளனர். அதே போன்று எல்லா தொழிலிலும் சவால்கள் உள்ளன. இதிலும் நம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நம்பகத்தன்மை
முக்கியம்.

அடுத்து நல்ல தொழிலாளர்களை அமைத்துக் கொள்வது மிகப் பெரிய சவால். என்னுடைய மாஸ்டர்கள் அனைவருமே மிகவும் திறமைசாலிகள் என்று சொல்வேன். நான் மனதில் நினைத்து அவர்களிடம் சொல்லும் டிசைன்களுக்கு அவர்கள்தான் உயிரோட்டம் கொடுக்கிறார்கள். அதே சமயம் பலர் விலகியும் சென்றுள்ளனர். 2013ல் நான் இந்த தொழிலுக்கு வந்தேன். இந்த ஆண்டுகளில் ஏராளமான அனுபவங்கள் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்துதான் தொழிலை நிலைநிறுத்த வேண்டும்.

*எதிர்கால திட்டங்கள்…

நான் பத்து வருடங்களாக இந்த தொழிலை நடத்தி வருகிறேன். இந்த யூனிட் ஆரம்பித்த புதிதில் ஆறு, ஏழு தொழிலாளர்களை கொண்ட பெரிய யூனிட்டாக இருந்தது. 2020ல் கொரோனா பாதிப்பால், வியாபாரத்தில் ஏற்பட்ட தொய்வினால் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போனது. தற்போது இரண்டு பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இரண்டு வருஷமானாலும், இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்த மீண்டு வருகிறோம்.

அதனால் இதனை கொஞ்சம் பெரிய அளவில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தற்போது கடுமையாக முயற்சித்து வருகிறேன். அடுத்து பெண்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. இந்த துறை மேல் ஆர்வம் எனக்கு மட்டுமில்லை என் மகளுக்கும் இருப்பதால், அவளுக்கு ஒரு பொட்டிக்கினை வைத்து தரும் எண்ணம் உள்ளது’’ என்றார் யமுனா கேசவன்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post வீடியோ காலில் பார்த்தே அளவெடுத்து விடுவேன்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Yamuna Kesavan ,Dinakaran ,
× RELATED தியாகிகளா அம்மாக்கள்!