×

முறைகேடாக ரயில் டிக்கெட் எடுத்து விற்ற கணினி மைய உரிமையாளர் கைது

சேலம்: கணினி மையத்தில் முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்ற அதன் உரிமையாளரை சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் முறைகேடாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து விற்கும் நபர்களை கண்காணித்து பிடிக்கும் பணியில் சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடாக டிக்கெட் எடுத்து விற்கும் கணினி மையங்கள், ஜெராக்ஸ் கடைகளில் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். இந்தவகையில், நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோ மற்றும் கணினி மையத்தில் முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை நடப்பதாக சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் அந்த கணினி மையத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

இந்த சோதனையில், அம்மையத்தின் உரிமையாளரான மல்லசமுத்திரத்தை சேர்ந்த நாகராஜன் (38), முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து வெவ்வேறு பெயர்களில் பல ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்து வழங்கப்பட்ட ரூ.7,919 மதிப்புள்ள 14 ரயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கணினி மைய உரிமையாளர் நாகராஜன், 2 பெயர்களில் ஐஆர்சிடிசி கணக்குகளை வைத்துக்கொண்டு, முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனால், டிக்கெட் எடுக்க பயன்படுத்தப்பட்ட கணினி சிபியூ.,வை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கணினி மைய உரிமையாளர் நாகராஜன் மீது முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். நாமக்கல், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பகுதியில் வேறு எங்கேனும் இதேபோன்று முறைகேடாக டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறதா? என குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post முறைகேடாக ரயில் டிக்கெட் எடுத்து விற்ற கணினி மைய உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,RPF Crime Branch ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை