×

பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்?

விஸ்வாமித்திரர், ஏன் ராமனை காட்டுக்கு அழைத்துச் சென்றார் என்ற கேள்விக்கு பாசுரப்படி ராமாயணத்தில் இந்த இரண்டு வரி பதில் சொல்கிறது.

“காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து”

அதாவது, சீதைக்கு ராமனை மணம் முடிக்கவே விஸ்வாமித்திரர் அழைத்துச் செல்கிறார். தசரதனுக்கு இது தெரியாது. அவர் ஏதோ தாடகை வதத்திற்குத்தான் தன் மகனை அழைத்துச் செல்கிறார் என்று நினைத்தார். ஆனால், வசிஷ்டருக்குத் தெரியும். ராமாயணம் என்பது வில், இல், சொல் என்ற மூன்று வார்த்தையில்தான் முடிகிறது.

ராமனுக்கு, “ஒரு வில் ஒரு இல் ஒரு சொல்” என்பார்கள். இங்கேயும் அதுதான் நடக்கிறது. விஸ்வாமித்திரரின், ‘‘ராமனை அனுப்பு’’ என்ற சொல், ஜனகன் வைத்திருக்கக்கூடிய வில்லைக் காட்டுகிறது. அந்த வில், சீதையைக் கரம் பிடிக்க வைத்து, ராமனுக்கு ஒரு ‘‘இல்’’ (இல்லறம்) காட்டுகிறது. ஒரு வில்லை வளைத்து தாடகையை வதம்புரிந்தான். ஒரு வில்லை வளைத்து ஒடித்து சீதையை மணம்புரிந்தான்.

அவதார நோக்கம் நிறைவேறவேண்டும் என்று சொன்னால், விஸ்வாமித்திரர் வசிஷ்டர் போன்ற ஆச்சாரியர்கள் உதவவேண்டும். அதைத்தான் விஸ்வாமித்திரர் செய்கின்றார். அதை வசிஷ்டர் அங்கீகரிக்கிறார். அகல்யா சாப விமோசனம் முடிந்தவுடன், ராமனையும் லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு மிதிலைக்கு செல்லுகின்றார் விஸ்வாமித்திரர். எதற்காக? சீதையை ராமனோடு சேர்க்க வேண்டும் என்பதற்காக.

அதற்கான நோக்கம்தான், தாடகை வதமே தவிர, தாடகை வதம் என்பது பிரதான நோக்கம் அல்ல. விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகள் ஒரு ஹூங்காரத்தாலே, தாடகை போன்ற அற்ப பகைகளை நீக்கிக் கொள்ள முடியும். திரி சங்கு சொர்க்கத்தையே உருவாக்கியவருக்கு தாடகை வதம் பெரிய காரியமா என்ன? ஆனால், அதைவிட மிக முக்கியமான காரியம் சீதையை ராமருடன் சேர்ப்பது அல்லவா.

திருவையும் மாலையும் சேர்த்தால் தானே “திருமால்” ஆவார். கோயில் உற்சவங்கள் எத்தனை இருந்தாலும், மிக அற்புதமான உற்சவம் என்பது திருக்கல்யாண உற்சவம். (சேர்த்தி உற்சவம்) அந்த உற்சவம் நடத்துவதுதான் விஸ்வாமித்திரர் நோக்கம். அதற்காகத்தான் மிதிலைக்கு அழைத்துச் செல்கின்றார். மிதிலைக்குள் நுழையும்போது, ஆடுகின்ற கொடிகளின் அசைவு ராமனுக்கு ஒரு செய்தியைச் சொல்வது போல இருக்கிறது என்று கம்பர் ஒரு அற்புத நயத்தைக் காட்டுகின்றார்.

`மை அறு மலரின் நீங்கி.
யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
அழைப்பது போன்றது அம்மா!’

“இந்த நகரம் (மிதிலை) செய்த தவத்தினால், மகாலட்சுமிதான் வசிக்கின்ற தாமரைமலரில் இருந்து பிரிந்து இங்கு அவதாரம் செய்திருக்கிறாள் அவளை மணந்து கொள்ள நீ வரவேண்டும்’’ என்று வரவேற்பது போல் கொடிகள் அசைகிறதாம். இதற்குப் பிறகு மிதிலை வீதிகளில் நுழைகிறார்கள். ராமன் சீதையைப் பார்க்கின்றான். மேல்மாடத்திலிருந்து சீதையும் ராமனைப் பார்க்கின்றாள். மிக அற்புதமான ஒரு பாட்டு.

`எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்’.

அதற்குப் பிறகு, சனகர் அரண்மனையில் நுழைகிறார்கள். ஜனகரியிடம் ராமனுடைய தோள் வலிமையைப் பற்றி மிகச் சிறப்பாக விஸ்வாமித்திரர் கூறுகின்றார். காரணம், அந்த தோள் வலிமையைக் காட்டித்தானே மைதிலியை மணம் முடிக்கப் போகின்றான். பிறகு அந்த பெரிய வில் வருகின்றது. அந்த வில்லை ராமன் வளைத்தால். தன்னுடைய துயரம் தீரும் என்று ஜனகன் சொல்கின்றார். ராமன், ஒரு யானையைப் போல் நடந்து சென்று, வில்லை எடுக்கின்றான். எப்படி எடுக்கின்றான் என்று சொன்னால், ஒரு மாலையைப் போல் தூக்குகின்றானாம். அவன் எப்போது தூக்கினான் எப்பொழுது வில் முறிந்தது என்பது தெரியவில்லை.

`தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது
கேட்டார்.’

இத்தனை விரிவான செய்திகளையும் “காரார் திண் சிலை இறுத்து’’ என்று ஒரே வரியில் பாசுரப்படி ராமாயணத்தில் தொகுக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. ஒரு செயல் (action) என்றால், அதனுடைய விளைவு (effect) இருக்கும் இல்லையா? அந்த விளைவு சுபவிளைவு. ஆம்.. மைதிலியை மணம் முடிப்பது. இங்கே ஒரு அற்புதமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆழ்வார்கள் பெரும்பாலும் ஜானகி, மைதிலி என்கின்ற பெயர்களை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.

ஜானகி என்றால் ஜனகனின் பெண். மைதிலி என்றால் மிதிலையில் தோன்றியவள். ஜானகியின் தாயைக் குறித்து பெரிய விஷயங்கள் எதுவும் ஆழ்வார்கள் பாடியதாகத் தெரியவில்லை. ராமரைப் பாடுகின்ற பொழுது “மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவன்’’ என்று பாடியவர்கள், சீதையைச் சொல்லுகின்ற பொழுது, அவளுடைய வளர்ப்புத் தந்தையான ஜனகரின் பெயரையும், அவள் வாழ்ந்த நகரமான மிதிலையின் பெயரையும் குறிப்பிடுகின்றார்கள். காரணம், இரண்டுக்கும் பெருமை சேர்த்தவள் அல்லவா!

இதைப் பின்னால், அனுமன் ராமனிடமே ஒரு பாடலிலே சொல்வதாக கம்பன் காட்சிப்படுத்துகின்றார்.

`உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்
தன் பெருந் தனயைஎன்னும்
தகைமைக்கும், தலைமை சான்றாள்
என் பெருந்தெய்வம்! ஐயா!
இன்னமும் கேட்டி என்பான்’;

உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உனது சிறந்த மனைவி என்ற தகுதிக்கும்; உன்னைப் பெற்ற மன் பெருமருகி என்னும் வாய்மைக்கும் – உன்னை மகனாகப் பெற்ற அரசரான தசரத சக்கரவர்த்தியின் சிறந்த மருமகள் என்னும் சிறப்புக்கும்; மிதிலை மன்னன் தன் பெருந்தனயை என்னும் தகைமைக்கும் – மிதிலை நகரத்து அரசனாகிய ஜனகனுடைய சிறந்தமகள் என்ற குணச்சிறப்புக்கும்; தலைமை சான்றாள் – தலைமை உள்ளாதற்கு ஏற்பச் சால்புடையாள்.

ஒரு தந்தை எப்படி ஒரு பெண்ணை வளர்க்க வேண்டும்? என்பதற்கு உதாரணமாக சீதையை, ஜனகன் வளர்த்து, தகுந்த மணமகனாகிய ராமனுக்கு மணமுடிக்கிறார். எனவே, ஒரு பெண்ணுக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுப்பதில், தாயைவிட தந்தைக்கு மிக அதிக பொறுப்பு என்பதைக் காட்டுகின்றது ராமாயணம்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post பெண்ணை, தந்தை எப்படி வளர்க்க வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Bhasura ,Vishwamitra ,Rama ,Karar Din ,Sita ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்