×

சென்னையில் பிப்.5ல் நடைபெறுகிறது இசை விழா: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை இசை நகரம் எனும் யுனெஸ்கோ அறிவிப்பினைக் கொண்டாடும் வகையில் சென்னையில் இசை விழா பிப்ரவரி 5 அன்று தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ சென்னையின் பாரம்பரியம் மிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கொண்டாடும் வகையில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பிப்ரவரி 5 அன்று சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசை விழா நடத்தப்படுகிறது. காலை 11 மணியளவில் தவில் வலயப்பட்டி வழங்கும் நாதஸ்வர தவிலிசை நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் திரு.டி.பாலாஜி குழுவினர் நாதஸ்வரம். பத்மஸ்ரீ விருது பெற்ற, கலைமாமணி, சங்கீத கலாநிதி வலயப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் சிறப்பு தவில் இசைக்கின்றனர்.

மதியம் 2.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரு.சசாங் சுப்பிரமணியம் குழுவினரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் அபிஷேக் ரகுராம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் மாலை 4.30 மணியளவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் விழா பேரூரையாற்றி ஓவிய, சிற்பக்கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்குகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இளம் கலைஞர்களுக்கு குரலிசை. கருவியிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய கலைகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 15 இளம் கலைஞர்களுக்கு பரிசுகளையும் வழங்குகிறார்கள்.

கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் திரு.சே.ரா.காந்தி வரவேற்புரையாற்றுகிறார். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் திரு.வாகை.சந்திரசேகர், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் எஸ்.சௌம்யா. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன். தமிழ்நாடு அரசு இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞர் திரு.ஜாகிர் உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் திருமதி க.சிவசௌந்திரவல்லி நன்றியுரை வழங்குகிறார்.

The post சென்னையில் பிப்.5ல் நடைபெறுகிறது இசை விழா: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Music Festival ,Chennai ,Tamil Nadu Government ,UNESCO ,Chennai Music ,City ,Tamil ,Nadu Government College of Music ,Nadu Government ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...