×

பெரியாறு நீர்த்தேக்கப் பரப்பில் ‘கைவைத்த’ கேரள வனத்துறை ஆனவச்சாலில் கார் பார்க்கிங் பணிக்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம்: தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

கூடலூர்: தேக்கடி வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த 2013ல் குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை கேரள வனத்துறை தேர்வு செய்தது. ஆனால் இந்த இடம் பெரியாறு அணை நீர்த்தேக்கப்பரப்பு பகுதி என்பதால் கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளியைச் சேர்ந்த தாமஸ் ஆபிரகாம் என்பவர் கடந்த 2014 ஜூன் மாதம் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைந்து கொண்டது. இதனால் ஆனவச்சாலில் பணிகள் செய்வதற்கு 2015, செப். 5ல் பசுமைத்தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கில் ஒன்றிய தலைமை நிலஅளவை அலுவலர் சொர்ண சுப்பாராவ் மற்றும் ஒன்றிய வனத்துறை இயக்குநர் சோமசேகர் கொண்ட ஆய்வுக்குழு சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அப்போதைய அதிமுக அரசு தொடர்ந்து மவுனம் சாதித்ததாலும், வழக்கு விசாரணையின் போது தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகாததாலும் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் கோரிக்கையை ஏற்று, ஆனவச்சால் பகுதியில் கட்டிடங்கள் இல்லாத வாகன நிறுத்தும் இடம் மட்டும் அமைத்துக் கொள்ள 2017ல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விதிமுறைகளுடன் கூடிய தற்காலிக உத்தரவை பிறப்பித்தது. ஆனால் கட்டிடங்களுடன் கூடிய கட்டுமானப்பணி செய்ததால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதுகுறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இதையடுத்து, இதுதொடர்பாக நடந்த சுமூக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கடந்த அக்டோபரில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஓ.எஸ்.ஓகா அமர்வு முன்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘சர்வே ஆஃப் இந்தியா அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர் மூலம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அதன் அடிப்படையில், திருவிதாங்கூர் மகாராஜா தமிழகத்துக்கு குத்தகைக்கு அளித்ததாக கூறப்படும் பகுதிகளை முழுமையான அளவில் கணக்கிட வேண்டும். அதன் பிறகு, கேரள அரசின் கார் பார்க்கிங் பகுதி குத்தகைக்கு விடப்பட்ட நிலத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்படுகிறதா என்பதையும், அந்த பகுதியில் கட்டுமானம் அமைந்துள்ளதா என்பதையும் தெளிவாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும் 3 மாதத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணை 2024 மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சர்வே ஆஃப் இந்தியா திட்ட இயக்குநர்கள் ராஜசேகர், மகேஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக – கேரள அதிகாரிகளுடன் கடந்த 11ம் தேதி முதல் கார் பார்க்கிங், வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் தரைவழி சர்வே நடத்தினர். அதன்பின் வண்டிப்பெரியாறு, வாளார்டி, கருப்பு பாலம் பகுதிகளில் வான்வழி சர்வே (ட்ரோன் சர்வே) நடத்தி மு
டித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன்காட்சிக்கண்ணன் கூறுகையில், ‘‘பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கூடாது என்பதற்காகத்தான் கேரளா ஆனவச்சால் கார் பார்க்கிங் அமைக்கிறது என விவசாயிகள் அன்றே கூறினோம். ஆனால், அப்போதைய அதிமுக அரசு தொடர்ந்து மவுனம் சாதித்ததால் ஆனவச்சாலில் கட்டுமானப் பணிகளை கேரளா ஓரளவு நிறைவு செய்து விட்டது’’ என்றார்.

The post பெரியாறு நீர்த்தேக்கப் பரப்பில் ‘கைவைத்த’ கேரள வனத்துறை ஆனவச்சாலில் கார் பார்க்கிங் பணிக்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம்: தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK government ,Kerala Forest Department ,Anavachal ,Periyar Reservoir ,Kudalur ,Kumuli ,Thekkady ,Periyar dam reservoir ,Dinakaran ,
× RELATED அதிமுக ஆட்சியில் காவிரி நீரை...