திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாநந்தவாடி நகர் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை காட்டு யானையானது குடியிருப்பு நகரின் வீதிகளில் ஒய்யாரமாக வலம் வரும் காரணத்தினால் அச்சமடைந்த பொதுமக்கள் யானையின் நடமாட்டம் குறித்து அங்குள்ள வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, யானையின் கழுத்து பகுதியில் காலர் ஐடி என்று சொல்லக்கூடிய ரேடியோ காலர் ஐடி பொறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து இந்த யானை எங்கிருந்து வந்துள்ளது என்று விசாரணை மேற்கொண்டபோது, காட்டு யானையானது கர்நாடக மாநிலம் நாகர்கோலா என்ற வனப்பகுதியில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் யானை உலா வருவதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது சிரமமான ஒன்று என வனத்துறை கூறியுள்ளது. எனவே யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கேரள வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. காட்டு யானையானது அட்டகாசம் செய்யாமல் அமைதியான முறையில் வலம் வருவதால், பொதுமக்கள் அச்சமடையாமல் இருக்க வனத்துறை கேட்டு கொண்டுள்ளது.
The post கேரள மாநிலம் வயநாடு அருகே குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக வலம் வரும் ஒற்றை காட்டு யானை: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.