×

உச்சிப்புளி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

 

மண்டபம், பிப். 2: உச்சிப்புளி அருகே தர்ஹா வலசை பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்ததால், அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என் மனம் கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட தர்ஹா வலசை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பகுதியில் நாட்டுப் படகில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு எதிரே தர்ஹா வலசை செல்வதற்கு 3 கி.மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த தார்ச்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால், தற்போது பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாலை அமைக்க பயன்படுத்திய கருங்கற்கள் பெயர்ந்து பல்வேறு பகுதிகளில் குவிந்துள்ளது.

இதனால் உருவான பள்ளங்களில் மழை நீர் தேங்குகிறது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தர்ஹாவலசை கடற்கரை வரை செல்லும் சேதமடைந்த சாலையை முழுமையாக அகற்றிவிட்டு புதிதாய் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உச்சிப்புளி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uchipulli ,Darha Valasa ,Manam Kondan Panchayat ,Mandapam Panchayat Union ,Darha ,Valasa ,Dinakaran ,
× RELATED உச்சிப்புளி அரசு பண்ணையில் இரண்டு ரகத்தில் தென்னங்கன்று விற்பனை