×

பூந்தமல்லி அருகே பரபரப்பு சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் நூதன மோசடி: பொதுமக்கள் மறியல்

 

பூந்தமல்லி, பிப். 2: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ஏபிஆர் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் இதேபோல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சுமார் 50 கிளைகள் உள்ளன. தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை கால சிறப்பு சேமிப்பு திட்டங்கள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகை, வெள்ளி பொருட்கள் என கவர்ச்சிகரமான அறிவிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திட்டத்தில் இணைந்து பணம் செலுத்திய மக்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை. இது தொடர்பாக, சீட்டு பணம் கட்டியவர்கள் கொடுத்த புகாரில், அதன் உரிமையாளரை திருவண்ணாமலை போலீசார் கடந்த வருடம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிறுவனத்திற்கு பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் கிளை ஒன்றும் செயல்பட்டு வந்தது. அந்தக் கிளையும் தற்போது மூடப்பட்டுள்ளது. காட்டுப்பாக்கம் கிளையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல லட்சம் பணம் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காட்டுப்பாக்கம் கிளையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த நிறுவனத்திற்கு ஏஜெண்டுகளாக செயல்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் நேற்று அங்கு குவிந்தனர். ஆனால் காட்டுப்பாக்கம் கிளை மூடப்பட்டுள்ளதை அறிந்து வந்தவர்கள் ஆத்திரமடைந்து பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘செய்யாறு பகுதியில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் 15 பேரை சேர்த்து விட்டால் ஒரு கார்டு இலவசம் என கூறியதின் பேரில், ஏராளமானோர் இந்த திட்டத்தில் பெண்களை சேர்த்து விட்டனர். காட்டுப்பாக்கத்தில் மட்டும் பல கோடி மோசடி நடந்துள்ளது.

தற்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி வந்து பணத்தை திரும்ப தருவதற்கு உறுதி அளிக்க வேண்டும். எங்களை நம்பி இந்த சீட்டில் சேர்ந்தவர்கள் தற்போது எங்களது வீடுகளுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். போலீசாரிடம் புகார் கொடுத்தாலும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறினார்கள்,’’ இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பூந்தமல்லி அருகே பரபரப்பு சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் நூதன மோசடி: பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,APR ,Seyyar ,Thiruvannamalai district ,Thiruvannamalai ,Vellore ,Tirupattur ,Ranipet ,Chennai ,Kanchipuram ,Chengalpattu district ,
× RELATED பூந்தமல்ல நகராட்சியில் 250 பணியாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டை