×

ஹேமந்த் சோரன் ராஜினாமாவை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி: 20 மணி நேரம் கடந்தும் புதிய முதல்வர் பதவி ஏற்கவில்லை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்ததால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 20 மணி நேரம் கடந்தும் புதிய முதல்வர் அங்கு பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்),காங்கிரஸ்,ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இவர் மீதான நில மோசடி , சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய அமலாக்க அதிகாரிகள் அவரை கைது செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து அவர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். இந்த பரபரப்புக்கு இடையே, மாநில போக்குவரத்துறை அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரனை புதிய முதல்வராக எம்எம்ஏக்கள் தேர்வு செய்தனர். ஜார்க்கண்டில் புதிய அரசு அமைப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்து கட்சிக்கு ஆதரவளிக்கும் 43 எம்எல்ஏக்களின் கையெழுத்து இடப்பட்ட கடிதத்தை அளித்தார். ஆனால் 20 மணி நேரம் கடந்தும் புதிய ஆட்சி அமைக்க அவரை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைக்கவில்லை.

இதையடுத்து ஆளுநரை சந்திக்க சம்பாய் சோரன் நேரம் கேட்டார். நேற்று மாலை 5.30 மணிக்கு அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரிடமும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்துவெளியே வந்த சம்பாய் சோரன் கூறுகையில்,’ கடந்த 20 மணி நேரமாக காத்து கொண்டிருக்கிறேன். ஆளுநரிடம் இருந்து இதற்கான அழைப்பு இன்னும் வரவில்லை. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர் ராஜினாமா செய்த 2 மணி நேரங்களில் அடுத்த முதல்வர் பதவியேற்பதற்கு அழைக்கப்படுகிறார்.

ஆனால், ஜார்க்கண்டில் ஏன் தாமதப்படுத்துகின்றனர் என புரியவில்லை’’ என்றார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் ஆளுநர் தாமதித்து வருவதால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பாஜவினர் குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்று கருதி 47 எம்எல்ஏக்கள் 2 விமானங்களில் ஐதராபாத்துக்கு புறப்பட்டனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர்கள் அங்கு செல்லவில்லை.

* ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல்
ஹேமந்த் சோரனை நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 10 நாள் காவலில் வைக்க அமலாக்கதுறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரினர். அவரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம், அமலாக்கத்துறையின் மனு குறித்து இன்று முடிவு அறிவிக்க உள்ளது. இதற்கிடையே ஹேமந்த் சோரன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

The post ஹேமந்த் சோரன் ராஜினாமாவை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி: 20 மணி நேரம் கடந்தும் புதிய முதல்வர் பதவி ஏற்கவில்லை appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Hemant Soran ,Chief Minister ,Ranchi ,Enforcement Directorate ,Mukti Morcha ,JMM ,Congress ,Rashtriya Janata ,Dinakaran ,
× RELATED நிலமோசடி வழக்கில் கைது ஹேமந்த்...