×

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்தியா

விசாகப்பட்டினம்: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 3வது நாளே வெற்றிப் பெற்றாலும் வித்தியாசம் வெறும் 28 ரன் தான். எனினும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இப்போது முன்னிலையில் உள்ளது. கூடவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழத்திய உற்சாகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று 2வது டெஸ்ட்டில் களம் காண உள்ளது.

அந்த உற்சாகத்தில் இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ள ஆட்டத்தில் களம் காண உள்ள 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து நேற்றே அறிவித்து விட்டது. அறிமுக ஆட்டத்திலேயே 7 விக்கெட்களை வாரி சுருட்டிய டாம் ஹார்ட்லி, இரட்டைச் சதத்தை நெருங்கிய ஒல்லி போப், பகுதி நேர பந்து வீச்சிலும் கலக்கும் சுழல் ஜோ ரூட் ஆகியோருடன் புதிதாக சுழல் சோயிப் பஷீர்(20) அறிமுகமாக உள்ளார். பயிற்சியின் போது காயமடைந்த ஜாக் லீச்சுக்கு பதிலாக சோயிப், வேகம் மார்க் வுட்டுக்கு பதிலாக அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட உள்ளனர்.

அதே நேரத்தில் முதல் டெஸ்ட்டில் ஏமாற்றத்தை சந்தித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏராளமான மாற்றங்களுடன் 2வது டெஸ்ட்டில் களம் காண உள்ளது. கூடவே ராகுல், ஜடேஜா ஆகியோர் தொடரில் இருந்து விலகியதால் ஏற்பட்ட பின்னடைவை புதிய வீரர்களை வைத்து ஈடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்த வாய்ப்புக்காக ரஜத் பட்டிதார், சவுரப் குமார், சர்பரஸ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காத்திருக்கின்றனர். ஒருவேளை சிராஜிக்கு ஓய்வளிக்கப் பட்டால் முகேஷ் அல்லது ஆவேசுக்கு வாய்ப்பு கிடைக்கும்.இந்த ஆட்டத்தில் வெல்வதின் மூலம் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்பதுடன், தொடரை சமநிலைக்கு கொண்டு வர முடியும். கூடவே தொடரை கைப்பற்றும் வாய்ப்பையும் இந்தியா தக்க வைக்கும்.

* இந்தியா: ரோகித் சர்மா(கேப்டன்), ஸ்ரீகர் பரத், துருவ் ஜூரெல், சர்ஃபரஸ்கான்(விக்கெட் கீப்பர்கள்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர், ரஜத் பட்டிதார், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், அக்சர் படேல், சவுரப் குமார், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், முகமது சிராஜ், பும்ரா, ஆவேஷ் கான்.

* இங்கிலாந்து ஆடும் அணி: பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ், ஒல்லி போப்(விக்கெட் கீப்பர்கள்), ஜாக் கிரெவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட், ரெஹன் அகமத், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர், டாம் ஹார்ட்லி.

The post இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,England ,Visakhapatnam ,Hyderabad ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!