×

தூத்துக்குடி உட்பட பல பகுதியில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு உலக அளவில் முன்னணி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி முதலீடு: ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது மிகவும் அவசியம். தமிழ்நாட்டில் உள்ள நான்கு பெரும் துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கன்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ெஜஸ்பர் கன்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநர் ஆல்பர்ட் லோரென்ட் ஆகியோர் தமிழ்நாடு முதல்வரை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ரூ.2,500 கோடி முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் தொடர்புத்துறை தலைவர் லாரா பெர்ஜெனோ, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post தூத்துக்குடி உட்பட பல பகுதியில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு உலக அளவில் முன்னணி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி முதலீடு: ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Spain ,Chennai ,M.K. ,Stalin ,MoU ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...