×

எதிர்காலத்தை கருதி அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைத்ததற்கு ஐகோர்ட் பாராட்டு: அரசு, தனியார் பஸ் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த அறிவுரை

சென்னை: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோயம்பேட்டில் தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். கிளாம்பாக்கத்திற்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.

அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.
கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், பெண்களுக்கான பிரத்யேக வசதிகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்கள், அரசு பேருந்துகளுக்கான நிறுத்துமிடங்கள், கிளாம்பாக்கம் ேபருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி ஆகிய இடங்களுக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. ரூ.17 முதல் ரூ.37வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திற்கு மட்டும் 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட பெரிய அளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை. பயணிகளின் வசதியையொட்டி நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பிரச்னையில் சுமூக தீர்வு காண வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தைநடத்த போக்குவரத்து துறை தயாராக உள்ளது என்றார்.

தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அனைத்து வசதிகளுடன் இயங்கி வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மக்கள் தரப்பில் எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்றார். அப்போது வழக்கறிஞர் ராதா, கிளாம்பாக்கம் பேருந்து நிலத்தில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் செய்யப்படவில்லை என்றார். அதற்கு அட்வகேட் ஜெனரல், இது குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்கான ஏற்பாடுகள் கண்டிப்பாக செய்யப்படும். ஏற்கனவே, தமிழகம் முழுவதும் 1100 தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள். எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது என்று கூறி, விசாரணையை வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

The post எதிர்காலத்தை கருதி அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைத்ததற்கு ஐகோர்ட் பாராட்டு: அரசு, தனியார் பஸ் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த அறிவுரை appeared first on Dinakaran.

Tags : ICourt ,Clambagam ,Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,Clambakkam bus station ,Kalyankar ,Centenary Bus ,Terminal ,Chennai Klambakan ,IKord ,Klambakan bus station ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...