×

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக இந்தியா சிமென்ட்ஸ் ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல்

சென்னை: சென்னையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 2வது நாளாக சோதனை நடந்தது. சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘தி இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனம் நாடு முழுவதும் இயங்குகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எம்ஆர்சி நகர் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் சோதனை நடத்தினர்.

இதில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன் பிறகு தான் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ஏதேனும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதா என தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நேற்று அளித்த விளக்கத்தில், ‘அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என சென்னையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அவர்கள் கேட்ட ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம். இதனால் எங்கள் நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாங்கள் கருதவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக இந்தியா சிமென்ட்ஸ் ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,India Cements Office ,CHENNAI ,India Cements ,India Cements Limited ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம்...