×

யாருடன் கூட்டணி என முடிவு செய்யப்படும் மக்களவை தேர்தலில் பாமக தனித்து போட்டி இல்லை: சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: மக்களவைத் தேர்தலில் பாமக தனித்து போட்டி இல்லை, யாருடன் கூட்டணி என்பதை நான் முடிவு செய்வேன் என்று சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவித்தார். பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, நீட் விலக்கு, மாநில அரசுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றிய அரசு பறிக்கும் அநீதிக்கு எதிராக போராட வேண்டியது மாநிலக்கட்சிகளின் கடமை. மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதன் ஒருகட்டமாக, மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கிடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமை கிடைக்க அன்புமணி தலைமையில் பாமக ஆள வேண்டும். 14 மக்களவை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை என் வீட்டிற்கு அழைத்து பேசியிருக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை வென்றால் நமது இலக்கை அடைய முடியும். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் 60க்கும் மேற்பட்ட இடங்களை நாம் வெல்ல முடியும். நாம் அடையாளம் கண்ட 12 தொகுதிகளில் பூத் கமிட்டிகள் அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தனித்து போட்டி இட்டால் கூட ஏழு இடங்களில் நாம் வெற்றி பெற வேண்டும். தனித்து போட்டியிட இப்போது நாம் தயாராக இல்லை. தனித்து போட்டியிடுவது உங்களது விருப்பமாக இருக்காது என்று நான் நம்புகிறேன் என்றார். ராமதாசுக்கு பாரத ரத்னா: பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், ‘‘85 வயதில் பல்வேறு சாதனைகளை செய்த ராமதாசுக்கு ஏன் பாரத ரத்னா விருதை வழங்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சமூகநீதி பேசிய தலைவர், 40 ஆண்டு காலமாக மதுவை ஒழிக்க போராடும் தலைவரை பெற்றிருக்கிறோம். அவருக்கான மக்கள் அங்கீகாரம் கிடைத்துள்ளதா இல்லை. நம்முடைய இலக்கு 2 ஆண்டுகளில் இருக்கிறது. அதற்கு ஏற்ற வியூகங்களை ராமதாஸ் அமைப்பார்’’ என்றார்.

 

The post யாருடன் கூட்டணி என முடிவு செய்யப்படும் மக்களவை தேர்தலில் பாமக தனித்து போட்டி இல்லை: சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Ramadoss ,CHENNAI ,Ramadass ,Special General Assembly ,BAMA Special ,General ,Committee ,Egmore, Chennai ,Anbumani ,Hon ,BAMKA ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...